துளி வெட்கம் வேண்டாமா…சுப.வீரபாண்டியன்

விளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு …சுப.வீரபாண்டியன். கடந்த தமிழக ஆட்சியின் ஊழலுக்கு மெளன சாட்சியாக விளங்கிய சுப.வீரபாண்டியனின் தலையங்கம். துளி வெட்கம் வேண்டாமா ?

அண்ணா ஹசாரே ஆர்.எஸ்.எஸ் கருவி என்று சொல்வதற்கு சுப.வீக்கு என்ன நியாயம் இருக்க முடியும். ஊழல் பெருச்சாளிகள் ஏன் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என புத்தகம் எழுதியவர் ஆதாரங்கள் தர இயலுமா இல்லை வெறும் பிலாக்கணம் தானா ?

எல்லாவற்றையும் திராவிடத்திலும் ஈழத்திலும் கொண்டு போய் முடிக்கும் சுப.வீ  விளம்பரமில்லாத ஊழல் எதிர்ப்பை இவர் ஏன் நடத்தவில்லை ? ஊழல் குடும்பத்துடன் சேர்ந்ததால் ‘ஊழல்னு ஒண்ணுமே இல்லை’ என்று அடுத்த பகுத்தறிவுக் கட்டுரை வந்தாலும் வியப்பில்லை. ஆரிய – திராவிட பிளவு தான் ஆ.ராஜா மீது வழுக்குத் தொடர காரணம் என பகுத்தாய்ந்து வழக்காடியவர் இவர்.

காந்தியின் பெயரின்றி பெரியார் பெயருடன் செய்தால் இவருக்கு எல்லாம் நலம். திராவிட கோயில் பூசாரியாக இருப்பது தான் பகுத்தறிவோ ?

சூடிய பூ சூடற்க!

புனைவின் தேவை

சூடிய பூ சூடற்க , நாஞ்சில் நாடனின் சமீபதத்திய கதைத் தொகுதி. சாகித்ய அகாதமி விருது வென்ற படைப்பிது.  ஒரு குறிப்பிட்ட படைப்புக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கினாலும் ஒரு எழுத்தாளரின் வாழ்நாள் சாதனை விருதாகவே அதனைப் பார்க்கிறேன்.

குடியரசு தினத்தை முன் வைத்துத் தொடங்குகிறது சூடிய பூ சூடற்க! சிறுகதை. குடியரசு தினம் ஏன் எதற்கு யாருக்கு ? யாரைக்கூப்பிட்டு நாம் கொடியேற்றச் சொல்கிறோம். மக்களுக்குகாக அரசா அல்ல அரசுக்காக மக்களா ? குடியரசு விழா என்கிற பெயரில் நடக்கும் மேடை நாடகத்தில் அரசாங்கம் , அரசு ஊழியர்கள் அவர்களது ‘அன்றாட நடவடிக்கைகள்’ , குடியரசு தலைவரின் ரப்பர் ஸ்டாம்ப் தன்மை என பூமிநாதன் வழியாக ‘குடியரசை’ப் பரிகாசித்தப்படியே செல்கிறது கதை.

எழுத்தாளர்கள் தற்கால அரசியல் நிகழ்விலிருந்து ஒளிந்து கொள்ளக் கூடாது. அதனை அனுகி தன்னுடைய எண்ணங்களை பதிவு செய்வதுடன் என்.ஜி.ஆர் போன்றோரின் தியாகங்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப் படுத்த வேண்டும். இவை இன்றைய நம்பிக்கையற்ற சமூகச் சூழலுக்கு மாற்றாக அமையும். நாஞ்சில் நாடன் இதனைச் செவ்வனே செய்கிறார்.

லஞ்ச லாவணி

காட்சிப்பிழையாக இருக்க வேண்டிய லஞ்ச லாவண்யம் இன்று தினசரி உண்மையாகிவிட்டது.

கடைந்தெடுத்த அயோக்கியர்களைக் கொண்டு காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக விளையாட்டுத் துறையில் சம்மதப்படும் அளவுக்கு சுரேஷ் கல்மாடியின் ‘சேவை’ என்ன ?

காமன்வெல்த் கணக்கு வழக்குகள் எகன மொகனையாக இருக்கிறது என்று மத்திய ஊழல் கண்காணிப்புத்துறை 2010 ஜுலையில் அறிவித்தும் சம்மந்தப்பட்ட இரு அதிகாரிகளை மட்டும் இடைநீக்கம் செய்து விட்டு தான் அப்பாவி என்று தொலைக்காட்சிகளுக்கு எந்த கூச்சமும் இல்லாமல் பேட்டிக் கொடுக்கும் தையிரியம் எங்கிருந்து வருகிறது ?

இத்துனை நடந்தும் விளையாட்டுகள் முடிந்த பின் சட்ட நடவடிக்கைகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கும் நாட்டின் தலைமை. கொலை நடக்கப் போகிறது என அரசாங்கத்திடம் தகவல் கொடுத்தால் ‘நடக்கட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’  என்ற பதிலுக்கு ஓப்பாகும். ‘இல்லை இல்லை கொலை நடந்தே விட்டது’ என்று நாம் சொன்னால் ‘கொலை செய்தவன் தடயங்களை அழிக்கட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்கிறது அரசாங்கம்.

வல்லரசு , நாட்டின் கௌரவம் என லாவணி பாடிக்கொண்டு மாநில அரசர்களை விட பண்மடங்கு பகல் கொள்ளையடிக்க காமன்வெல்த் விளையாட்டு சிறந்த வழியாகிவிட்டது. விளையாட்டு என்றாலே ஊழல் என்கிற நிலை இன்று உலகெங்கும் நிலவுகிறது. ஆனால் பிற நாடுகளில் ஊழல் செய்தவர்கள் சில காலமேனும் கம்பி எண்ணித்தான் ஆக வேண்டும்.

இங்கு நாடாளமன்ற எம்.பிகளை வாங்கிய வழக்கிலேயே முன்னாள் பிரதமர் நிரபராதி என தீர்பெழுதும் நீதிமன்றங்கள் உள்ளன. ஊழல் செய்தவருக்கு அமைச்சர் பதவி தரும் அரசியல் கட்சிகள் உள்ளன.

பல நூறுகளில் ஊழல் செய்தால் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இதே ஊழலை பலகோடியில் செய்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. காமன்வெல்த் , சார்க் விளையாட்டுகள் எல்லாம் பண முழுங்களின் விளையாட்டுத்திடலாகி விட்டன. விளையாட்டு வீரர்களின் சாகசமெல்லாம் இங்கு இரண்டாம் நிலைதான்…

எந்திரன் இசை , பாடல்கள் – இரும்பிலே முளைத்த காது தேவை

குலுக்கல் முறையில் அறிவியல் சொற்களை தேர்ந்தெடுத்து(?) , ‘பாதசாரி’களுக்குப் புரியும் அளவுக்கு எழுதினா போதும் சார்! எந்திரன் பாடல்கள் தயார். சரி அப்படியாவது எதாவது உபயோகமான சிந்தனை விதைக்கப்படுகிறதா…ஹூஹூம்!

பா.விஜய்க்கு சுக்குமிளகில் சூப் கொடுக்க வேண்டியது தான். ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ கணக்காக வரும் கிலிமஞ்சாரோ என்ன சொல்லவறீங்க ‘ஆதிவாசிங்களா’ ? ‘ஆளளவுக்கு ஆலிவ் பழம்’ சாப்பிட சகிக்காது என்பது என் எண்ணம். எதுகை மோனைக்கு இருக்கும் முக்கியத்துவம் சொற்களுக்கும் பாடல் வரிகளின் ஓட்டத்திற்கும் சுத்தமாக இல்லை. சொல் விளையாட்டு என வைத்துக் கொள்வோம்.

இரும்பிலே ஓர் இருதயம் பாடலில் பயங்கரமான உச்சரிப்பால் வரும் விபரீதத்தைப் பாருங்கள்

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ

இரும்பிலே ஓர் இருதயம் முலைக்குதோ

பூஜ்ஜியம் ஒன்றோடு

பூவாசம் இன்றோடு

பூச்சியின் ஒன்றோடு

பூவாசம் இன்றோடு

I’m a super girl

உன் காதல் rapper girl

I’m a super girl

உன் காதல் rubber girl

யோகியின் ‘பூம் பூம் ரோபோ டா’ மண்டைக்குள் அறைகிறது. நீங்காது. ‘மலஅண்ணாமல’ என்ற தொடரைப் போல. பாடலின் மீதி மறந்துவிடும்.

அரிமா , மலைப் பாம்பு என்று விஞ்ஞானியை வர்ணனை செய்வதும் எந்திரனை ‘புதிய மனிதா’ என்பதும் குழப்பமான பாடல் ஆசிரியர்களின் மனநிலையா இல்லை புகழ்ந்தே ஆகவேண்டுமென்ற நிர்பந்தமா ? அஃறிணை,  எஃகு , இரும்பு, சிலிக்கான், நியூட்டன், எய்ன்ஸ்டைன் போன்ற சொற்கள் சுழற்சி முறையில் பாடலுக்கு பாடல் வருவது அயர்ச்சி. காதலனில் உடம்புக்குள் நாடிகள் எத்தனை என்று கேட்பது போல் காந்தக் கண்ணுக்குள் எத்தனை எலக்டிரான் என்று கேட்பது அபத்தமாக இருக்கிறது.

எண்ணிப்பார்க்க வேண்டிய ‘அழகியல்’ வர்ணனைகள் – பா.விஜயின் 100 கிராம் இடை கொண்ட பெண் என்ன ஆவாள்? Osteoporosis நோயின் தீவிரத்தை அழகாகவே சொல்லியருக்கிறார். வைரமுத்துவாது 50 கிலோ தாஜ்மாஹால் என்று வர்ணித்துத் தப்பிக் கொண்டார். மோதிரம் ஒட்டியானம் ஆனக்கதை. காதல் அனுக்களிள் ஓடுகிற தண்ணீரில் ஆக்சிஜன் தான் அதிகமாம்! H2O….ஓஓஓ!

எழுதிய வரிகளை இப்படிப் போட்டால் ஒரு பாட்டு அப்படி போட்டால் ஒரு பாட்டு என்று முடிவுடன் தான் பாடல் வரிகள் எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

இசையில் மெட்டுக்களுக்கு விடுமுறை கொடுத்துவிட்டார் இசையமைப்பாளர். இசை கேட்பவருடன் எந்த அணுக்கமும் ஏற்படுத்தா இசை. இதனால் தான் ‘எந்திரா எந்திரா’ என்று கத்துகிறார்களோ ?

சில முறை கேட்கக் கூடிய ஒரே பாடல் ‘இரும்பிலே ஓர் இருதயம்’. ஹலோ டாக்டர் ஹார்ட் வீக்காச்சே!!

***

எந்திரனில் மிஸ்ஸிங் வாலி , யுவன் சங்கர் ராஜா.