புனித ஆத்மாக்களா இல்லை தேவர்களா விடுதலைப் புலிகள் ?

26 10 2008

எச்சரிக்கை: படங்களைப் பார்க்க சற்றே மனத்தை திடப்படுத்திக் கொள்ளவும்.

சில நாட்களாக நெஞ்சைக் கிழிக்கும் ஈழத் தமிழர்களின் ஓலங்கள் அடங்கிய வீடியோகளை பார்த்துவருகிறோம். மறுபக்கத்தையும் பாருங்களேன்:

  • பள்ளி குழந்தைகளைத் தாக்கியது சிங்கள ராணுவத்தின் குண்டுகள் மட்டுமா ?
  • இன படுகொலைகள் செய்வது சிங்களர்கள் மட்டுமா ?
  • போர் தர்மம் பற்றி பேசுபவர்களுக்கு: புலிகள் பொது மக்களையும் பொது சேவைகளையும் தாக்கவே செய்துள்ளனர்
  • இப்போழுது நான் ஏன் புலிகளையும் ஈழமக்களையும் பிரித்து பார்க்க வேண்டும் என்பதை சொல்கிறேன் என புரியும் என்று நினைக்கிறேன்.





    அவார்டா கொடுக்க போறாங்க – சினிமா தொடர் பதிவு

    20 10 2008

    ஆர்.வி அவர்களின் அழைப்பை ஏற்று இத்தொடர் பதிவினை எழுதுகிறேன்.

    1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

    படம் பார்க்க அரம்பித்தது ஆறு வயதில்.

    நினைவு தெரிந்து கண்ட முதல் படம் ரஜினி நடித்த ராஜாதி ராஜா.

    அதே நாள் சிந்து பைரவி பார்க்க போன என் அத்தை மகளைக் கண்டு ஏன் இப்படி என்று நினைத்தேன். அவர்களுக்கும் அப்பொழுது வயது 10க்கு மேல் இருந்திருக்காது. இன்றும் பைரவியாகவே இருக்கிறாள்.

    2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

    சரோஜா – 54 மைல் கல் சென்று பார்த்தேன்.

    3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

    ரிதம். இணைய தளத்தில் (www.rajshri.com).

    மீண்டும் பார்க்க வேண்டும் என்று பல நாட்களாக தேடி பார்த்த படம் ரிதம். புரட்சி என்ற பெயரில் பெரிதும் மொக்கைப் போடாமல் விதியில் இணையக் கூடிய இதயங்களுக்கு இவ்வுலகில் இடமுண்டு என்று மிகவும் எதார்த்தமாகக் காட்டிய படம்.

    4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

    ரோஜா
    இந்தியன்

    5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

    இப்போவா அப்போவா என்று தொடர்ந்து மக்களை பேச வைக்கும் ரஜினியின் அரசியல். விஜயகாந்தும் துணிச்சலாக களத்தில் குதித்ததும் முக்கியம் என்று கருதுகிறேன்.

    5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

    மை டியர் வேதாள உலகம் – 3டி படம். சிறு வயதில் பார்க்க சென்று நடுவில் ஓடி வந்துவிட்டேன்.

    6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

    இல்லை. அன்றாட தமிழ் சினமா செய்திகளை அவ்வப்பொழுது இணையத்தைத் துழாவும் பொழுது கண்ணில் பட்டால் படிப்பேன்.

    7. தமிழ்ச்சினிமா இசை?

    நிற்காமல் கேட்டுக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் இருக்கிறேன்.

    ஏ.ஆர். ரஹமான் என்றால் பைத்தியமாக இருந்த காலம் உண்டு. பின்னர் இளையராஜாவின் பாடல்களை ரகுமான் இசையினைடையில் கேட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. இருப்பினும் ஒரே வேளையில் பத்து பாடல்கள் மேல் இளையராஜாவின் இசையில் கேட்டால் அலுப்பு தட்டுவது உண்மையே.

    யுவனிடம் சரணடையும் பொழுது ரெட் புல் குடித்தார் போல் இருக்கும். ஹெரிஸ் வேண்டாம், இவர் இசையே இவரைப் பற்றி பேசட்டும். ரகுமான் கற்றுக் கொண்ட குருவிடம் அதே நாளில் இசைப் பயிற்சிக்கு சென்ற வித்தியாசாகரின் மெலடிகள் அற்புதம் என்றே சொல்லத் தோன்றும். ஆனால் ஷெல் லைப் கொஞ்சம் குறைவு என்றும் தோன்றும்!

    பழைய பாடல்களில் ஜெமினி ஸ்ரீநிவாஸ் கூட்டணி பிடிக்கும். அதே போல் சிவாஜி-டி.எம்.எஸ்

    8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

    நிறைய ஹாலிவுட் படங்கள் பார்த்து கெட்டு போய் உள்ளேன். இருப்பினும் ஜப்பானிய/இரானிய படமெல்லாம் பார்க்கும் விருப்பம் கிடையாது. கல்லூரி நாட்களில் சில பல தெலுங்கு படங்களும் பார்த்துள்ளேன். ஹிந்தி படங்களும் பார்ப்பேன்.

    தாக்கம் ஏற்படுத்தியது

    1. ச்க் தே இந்தியா
    2. லகான்
    3. நு வொஸ்தானண்டே நேனு ஒத்தண்டானா (சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்)

    9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

    இல்லை.

    10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    நேற்று என்பது உன் கையில் இல்லை
    நாளை என்பது உன் பையில் இல்லை
    இன்று மட்டுமே…

    தொழில் நுட்பத்தை மட்டுமே நம்பி படங்கள் வரத் தொடங்கிவிட்டது. உதாரணமாக சரோஜா மற்றும் சிவாஜி, கொஞ்சம் சுப்பிரமணியபுரமும். கதை, திரைக் கதைகளில் புது அணுகுமுறைக்காக காத்துள்ளேன். கொஞ்சம் அந்த ஆங்கில டி.வி.டிகளை கதைக்கு உபயோகப்படுத்தாதீங்க! அதே சமயத்தில் ராமாயணம் மஹாபாரதம் என்று கழுத்தை அறுக்க வேண்டாம். புதிய அகராதிகளுக்காக காத்திருக்கிறோம்.

    11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

    பிற மொழி படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என்று பல பொழுதுபோக்குகள் இருக்கின்றன. சினிமா செய்திகள் வரவில்லை என்றால் ஊடகங்களுக்கே இழப்பு. இருப்பினும் தமிழ் தொலைக்காட்சிகள் இந்த சினிமா உலகத்திலிருந்து விடுபட்டு நல்ல நிகழ்ச்சிகள் தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

    இந்நிலையில் தமிழர்கள் நிறைய பேர் மானாட மையிலாடா என்ற கலாச்சார நிகழ்ச்சியை கண்டு அதிர்வார்கள்!





    சீமான்: தமிழனத்தின் அக்னி புயலா ?

    15 10 2008

    அது என்னங்க, இசைப் புயல் கேள்வி பட்டுருக்கோம், ஆனா தமிழனப் புயல்னு ஒரு பட்டம் கொடுத்திருக்காங்க குமுதம்.காம் இணைய தளத்தில் ?

    இந்த நேர்காணலில் சீமான் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள்:

    1. இந்திய அரசு இன்றும் இலங்கை அரசுக்கு உதவி செய்கிறது. இதனால் என் சகோதர சகோதரிகள், உடன் பிறப்புக்கள் இலங்கையில் கொல்லப்படுகின்றனர்.

    2. இந்திய அரசு மட்டுமல்ல பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளும் இலங்கை சிங்கள அரசுக்கு ஒரு இனத்தையே [தமிழனம் என்று படிக்கவும்] அழிக்கும் அளவிற்கு நவீன ஆயுதங்களை வழங்கிவருகிறது.

    3. சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்கு ஆயுதம் கடத்தினார்.

    4. மதங்கள் சாக வேண்டும், சாதிகள் சாக வேண்டும் என்று கர்ஜிக்கும் பெரியார் பாசறை, [தமிழ்] இனப் பற்றைப் அடையாள அட்டையாகத் தமிழர்கள் அணியவில்லை என்றால் தமிழனம் தழைக்காது என்கிறார்.

    5. கர்நாடகத்திலிருந்து நம்மால் நியாயமானத் தண்ணீர் வாங்க முடியாது ஏன் என்றால் கர்நாடக மக்கள் கன்னடன் என்ற அடையாளத்தை முன் நிறுத்துகிறான். கேரளத்தில் பொது உடைமை பேசும் மார்க்சிஸ்ட் கட்சியும் அதே அடிப்படையில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். அதனால் இம்மாநிலங்கள் மீது பொருளாதாரத் தடைக் கொண்டுவர வேண்டும்.

    ***

    Dangers of tamil chauvinism (The Hindu)

    திருத்தம்: இந்த விமர்சனத்தை வைத்த ஹிந்து நாளிதழ்களை சிலர் எரித்தும் அவர்கள் அலுவலகங்களைத் தாக்கவும் முற்பட்டுள்ளனர்.

    These chauvinistic tendencies are inimical to the interests of India

    தமிழகத்தின் இலங்கை அரசியல் – என் பார்வையில்:

    தமிழ் மக்களையும் வி.பு வையும் பிரித்து பார்க்க வேண்டியுள்ளது. கட்டுரை எழுதியவர் இந்தியா இலங்கை விவகாரங்களில் கலக்கக் கூடாது என்று சொல்லுவதில் எனக்கு உடன்பாடு உண்டு.

    தமிழகக் கட்சிகள் அடையாளமாகவே கோஷம் எழுப்புகின்றனர். இலங்கை ராணுவம் வி.பு. வின் தலைமையகத்தின் 2 கி.மி அருகில் இருக்கும் பொழுது இப்படி போராட்டத்தில் இறங்கியிருப்பது அவர்களின் வி.பு ஆதரவையே காட்டுகிறது.

    தமிழ் மக்களுக்காக எத்துனை முறை அரசியல் சமரசத்தை வி.பு அடித்து நொருக்கியது என்பதையும் எண்ணிபாருங்கள்.

    இந்தியாவிற்கு காஷ்மீரில் ஒரு நியாயம், இலங்கைக்கு ஈழத்தில் ஒரு நியாயமா ?

    1970களிலிருந்து நடைபெற்று வரும் ஈழப்போராட்டம் இப்பொழுது சமரசம் என்கிற நிலைகளைக் கடந்து ”ஒரு உறையில் இரு வாள் இருக்க முடியாது” என்று வந்துவிட்டது.

    போர் நிற்க வேண்டுமெனில் ஒன்று இலங்கை அரசு கவிழ்ந்து ஈழத்தைத் விடுதலை செய்ய வேண்டும் இல்லை என்றால் வி.பு கவிழ வேண்டும்.

    வி.பு இலங்கைத் தமிழனக்குக்காக போராடும் குழு என்றாலும் அரசியல் ரீதியாக சமரசம் காண முயன்ற பலத் தமிழ் அரசியல் தலைவர்களைக் காவு வாங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அரசியல் சமரசம் காண முன் வராத எந்த குழுவையும் எந்த அரசாங்கமும் அங்கீகரிக்காது. எனவே தான் இலங்கைத் தமிழருக்கு ஆதரவு என்ற போற்வையில் வி.பு விற்கு தமிழக அரசியல்வாதிகள் ஆதரவுத் திரட்டிகின்றனர்.

    புலிகள் வீழ்ந்தால் அது இலங்கைத் தமிழருக்குத் தாற்காலிகத் தோல்வியென்று தான் தோன்றுகிறது. எனினும் தமிழர்கள் அங்கு சிங்களர்களால் இனி சிறுமை படுத்தப்படமாட்டார் என்று நம்பலாம். இன்னும் 30 ஆண்டுகளுக்கு போர் செய்ய எந்த அரசுக்கும் இனி சக்தி கிடையாது, போராளிக்கும் நன்மைகள் கிடையாது.





    சரோஜா – திரில்லர் ஆனா காமெடி

    11 10 2008

    வெங்கட் பிரபுவிடம் பலர் மிகவும் எதிர்பார்கின்றனர். இந்த எதிர்பார்ப்புக்குறியவரா வெங்கட் ?

    சென்னை 28 என்கிற சென்னை நகர் சுண்ணாம்பு கால்வாய் சந்துகளில் நடந்த வயதுக்கு வந்த அறிவால் வளராத மனிதர்களுடைய தினசரி வாழ்கையைப் படமாக எடுத்து வர்த்தகரீதியில் வெற்றி கண்டவர் வெங்கட்.

    ஒரு படம் வெற்றி பெற நட்சத்திரங்கள் தேவையில்லை என்று சென்னை 28 மற்றும் சரோஜா படங்களில் நிரூபித்துள்ளார் என்பது சில பிரபலங்களின் கருத்து.

    இவர்களிடம் ஒரு கேள்வி – வெங்கட் பிரபுவின் முதல் தமிழ் படம் – உன்னை சரணடைந்தேன் – பார்த்தீர்களா ? படத்தில் இரு நாயகர்கள் ஒரு பெண்ணின் காதலுக்காக போராடுவார்கள். பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் கிடையாது. ஏன் எஸ்.பி..பி.சரண் தான் ”கதாநாயகன்” என்று சொல்லலாம்.

    இப்படி நட்சத்திரங்கள் இல்லாத முதல் படம் ”தோற்றது” இவர்கள் கண்ணில் ஏன் படவில்லை ?

    ***

    சென்ற வாரம் சரோஜா படம் திரையரங்கில் கண்டேன். என்னைப் பொருத்த வரை எதிர்பார்ப்பு இருந்த படம்.

    படம் வெளியான முதல் வாரத்தில் சரோஜா என்ற படம் Judgment Day என்ற ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பி என்று தகவல்கள் கசியத் தொடங்கிவிட்டது.

    இருந்தாலும் சென்னை 28ன் அணி செய்த படமாச்சே…என்ன தான் செய்தார்கள் என்று 54 மைல் சென்று பார்த்தேன். படம் பார்த்து இரண்டு மணி நேரம் கழித்து, எவ்வளவு தான் உதட்டு சாயம் பூசினாலும் பன்னி பன்னிதான் என்ற வாசகம் வந்து வந்து போனது மனத்தில்.

    பள்ளி மாணவி கடத்தல் என்பதை இவ்வளவு சிறு பிள்ளைத் தனமாகக் காட்டவே முடியாது என்று நினைக்கிறேன். பிரேம்ஜி அமரன் நடித்த கணேஷ் குமார் பாத்திரம் – அரை வேக்காடா இல்ல அப்பாவியா இல்ல இரண்டுமா ?

    நாற்காலியில் கட்டிப் போட்டிருக்கும் பள்ளி மாணவியைப் பார்த்து காதல் வயப்பட்ட ஒரே தமிழ் சினிமா கதாபாத்திரம் பிரேம்ஜி அமரனின் கதாபாத்திரமாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

    ஏற்கனவே கயவன் கையில் கசங்கும் அந்த பள்ளி மாணிவியை பாரதிராஜா தேவதைகள் கொண்டு காதலிக்கும் காட்சி அமைத்த வெங்கட் பிரபுவின் ”நகை”ச்சுவையை என்னவென்று சொல்ல ?

    இன்சென்ஸிடிவ்! பிடோஃபிலிக்!!

    திரில்லர் ஆனா காமெடி என்பது உப்மா ஆனா இனிக்கும் என்று சொல்வது போல் உள்ளது.

    இவரிடம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் அளவுக்கெல்லாம் சரக்கு இல்லை என்பதே என் கருத்து. சாரு சொன்னாலும் சரி இல்ல எல்லா ஊடகங்கள் போற்றினாலும் சரி வெங்கட் பிரபுவின் சரக்கு டி.வி.டிகளில் தான் உள்ளது என்பது நிதர்சன உண்மை.





    தமிழில் முதல் மின்னஞ்சல்

    9 10 2008

    கணினி இயக்கக் கற்றுக் கொண்டு பத்து வருடங்கள் பின்னர் முதல் முறையாக நான் இந்த வருடம் தமிழில் மின்னஞல் செய்தேன். தமிழில் மின்னஞசல் அனுப்புவதே பெரிய செய்தியா என்றால், ஆம் என்றே சொல்லுவேன். ஆங்கில விசைப்பலகையில் டிரான்ஸ்லிட்ரேட் முறையில் தான் என்னால் தமிழில் தட்டச்சு செய்ய முடியும் தமிழ்99 கற்றுக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.

    முதலில் தமிழில் மின்னஞ்சல் செய்தது என் தாத்தாவிற்கு கனாகாபிஷேகம், அனைவரும் வாருங்கள், என்று என் உறவினர்களுக்கு அனுப்பினேன். ஒருவரும் ”பலே” என்று சொல்லவில்லை. இதில் சின்ன மகிழ்ச்சி. எப்படி ?

    சமீபத்தில் வாரணம் ஆயிரம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பலரும் படத்தின் பெயர் அற்புதம். வாரணம் என்பது இன்றையத் தமிழர்களுக்குப் புதிய சொல் என்று கேவலப்படுத்தினர். அதே இசை வெளியீடு மேடையில் கௌதம் மேனன் ஆங்கிலத்துக்கு இடையே தமிழை சேர்த்துக் கொண்டிருந்தார் என்பது வேறு விஷயம்.

    தமிழகப் பள்ளியில் தமிழைப் பாடமாகக் கொண்ட எவரும் கலிங்கத்து பரணி படிக்காமல் இருந்திருக்க முடியாது. கலிங்கத்து பரணியில் வரும் “வாரணம் ஆயிரம்” பாடலைப் போற்றாதத் தமிழாசிரியர்களே இருக்க முடியாது என்று நினைக்கிறேன். அப்படி இருக்க கௌதம் மேனனன் தமிழர்களை அகராதி தேட வைத்துவிட்டார் என்று “பலே” பாராட்டினார்கள்.

    அது போல் என் உறவினர் யாரும் ”பலே நீ தமிழில் மின்னஞ்சல் செய்தாய்” என்று சொல்லாதது எனக்கு ஒரு அற்ப சந்தோசம். பின்பு சில நாட்களில் அரட்டை அரங்குகளில் (இணையத்தில்) தமிழில் தட்டச்சு செய்ய விழைந்தேன். அப்போழுது என் தங்கை எப்படி தமிழில் தட்டச்சு செய்கிறாய் என்றாள். NHM Writer என்ற மென்பொருளை அவளுக்கு அறிமுகப் படுத்தினேன். இருப்பினும் இன்றும் ஆங்கில சொற்கள் கொண்டே தமிழில் என்னுடன் அரட்டை அடிக்கிறாள். சில நேரங்களில் நானும் இவ்வாறு செய்வது உண்டு. NHM Writer உதவியுடன் பத்து இந்திய மொழிகளில் தட்டச்சு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ***

    நான் நெய்தல் நிலமென்றால் என்னவென்றுத் தெரிந்துக் கொள்ள இணையத்தை சுற்றி வந்தேன். சங்கத்தமிழ் விளக்கம் ஒன்றை பி.கே. சிவகுமாரின் வலைப் பதிப்பில் கண்டேன்(வருடம் 2006). விளக்கம் நன்றாகவே இருந்தது. இருப்பினும் கருத்துப் பெட்டியில் இருந்த ஒரு கருத்து என் தலையை சுற்றியது:

    http://blog.360.yahoo.com/blog-PXV91X0hcLXIfIjWgURCDm17.Q–?cq=1&p=46#comments

    Pari, thanks. You could be very well correct. I could figure out the meaning of Manimidam Pavalam and Nithila Kovai. When I did figure out, I thought the names were given based on grammer or how the paadalkal were constructed. Ainthu Thinaikal, agathinaikalai solkireerkal enru ninaikirean. Paalai enru oru nilam illai. Mullaiyum kurinjiyum muraimai itru thirinthu paalai enbathor paruvam kollum enru patithathu ninaivu varukirathu. Aka naanoril ennukum thinaikum enna vuravu enru enakum theriya villai. aanaal partheerkalaa, paalai thinaiyil thaan athikam paadalkal. Pirithalum pirithal nimithamum tharukira sokam. Sweeteest songs are those which talks of saddest things enru shelly sonnathu ninaivuku varukirathu.

    bear with my thanglish. just came to work. could not control my urge to reply after seeing ur comment.

    thanks and regards.

    தமிழில் ஒரு மென்பொருள் தட்டச்சு செய்ய அலுவகங்களில் ஏன் முடிவதில்லை. தறவிறக்கம் செய்த மென்பொருள் கொண்டே தமிழை கணினியில் உபயோகிக்க வேண்டியுள்ளது. நாம் தமிழ் தெரிந்தவர்களுடன் பெரும்பான்மையான நேரங்களில் கணினியில் தமிழில் உரையாடாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    ஆனால் ஆங்கிலச் சொற்கள் கொண்டாவது தமிழில் ’பேசிவிட’ வேண்டும் என்பது அனைவரின் ஆர்குட் ஸ்கிராப் பெட்டிகளைக் கண்டால் தெரிகிறது.

    “yei eppidi di irukke”
    “nalla irukken”

    என்று நாம் பார்க்கத்தான் செய்கிறோம். இவர்களை மெல்ல மெல்ல தமிழில் பிழை செய்தாலும் பராவாயில்லை தமிழில் தட்டச்சு செய்ய ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம் அன்றாட கணினி உபயோகத்தில் நம்மால் முடிந்த தமிழை உபயோகிக்கலாம் என்பது என் தாழ்மையானக் கருத்து. இந்த அளவிற்கு நாம் ’சீர்திருத்தம்’ முதலில் கொண்டுவர முயல்வோம். இது ஒரு எட்டக் கூடிய இலக்கு என்று நினைக்கிறேன். பின்னர் தமிழ் படைப்புகளையும் அறிமுகம் செய்வோமே என்றால் தமிழ் இன்றைய தலைமுறையினரிடையே தழைப்பதில் ஐயமில்லை.