எனக்கு புத்தகத்தைப் படிப்பதை விட அதனை யாராவது வாசித்து காட்டினால் மிகவும் பிடிக்கும். சூடான செய்திகள் டி.வியில் இருந்தாலும் ரேடியோவில் என்ன சொல்கிறார்கள் என்று என் காதை அந்த பக்கம் நீட்டிவிடுவேன். பள்ளியில் படிக்கும் பொழுது காலை வேளையில் “அப்பா ஒரு நிமிஷம்” என்று சொல்லி தாத்தாவுடன் உட்கார்ந்து கல்கியின் அலை ஓசையை சென்னை வானொலியில் கேட்ட நினைவுகள் இன்றும் மனத்தில் பசுமையாக உள்ளன. எனவே என்னை ஒரு “ஆடியோ பெர்சன்” என்று சொல்லலாம்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் 1975 பின் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்று நினைக்கின்றேன். அவர் குடும்பத்தில் பலர் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட இயக்கங்களில் பங்குக் கொண்டவர்கள். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படமாக வந்ததை பலரும் அறிந்திருக்கக் கூடும்.

இவ்வொலிப் புத்தகத்தில் இடம் பெறும் கதைகள் இன்றைய பொலிடிக்கல் கரெக்ட்னஸ் என்ற இலக்கண வகைக்கு உட்படாதவை. உதாரணமாக நான் இருக்கிறேன் கதையில் வரும் கதாபாத்திரங்களை நொண்டி என்றும் வியாதிக்காரன் என்றும் தான் கதை முழுவதும் அழைக்கிறார் ஆசிரியர். பொலிடிக்கல் கரெக்ட்னஸ் இலக்கணத்தைத் தாண்டிப் பார்த்தால் வியாதியால் தொற்றும் நோயைவிட துவண்ட மனத்தின் விபரீதமான எண்ணங்கள் வேகமாக மற்றவர்களைத் தொற்றிக் கொள்ளக் கூடியது என்ற மாறுபட்ட கோணத்தில் கதை முடிவது சிறப்பு.
சமுதாயத்தில் வழக்கமாக ஒதுக்கப்படும் மனிதர்களின் கதைகளாகவே பல கதைகளும் இருக்கின்றன. ஒரு மாரல் சைன்ஸ் வகுப்பில் உட்கார்ந்திருக்கும் எண்ணம் ஏற்பட்டாலும் , இவை நம் தலைமுறையினரும் கேட்க வேண்டிய கதைகள். கதைக் கரு மற்றும் அவை வெளிப்படுத்தும் நியாயங்களும், தர்க்கங்களும் விவாதிக்கப் பட வேண்டியவை.
ஒலிப்புத்தகத்தில் 10 கதைகள் உண்டு. எனக்குப் பிடித்தது யுக சந்தி. அதில் கணவனைத் தவரவிட்ட பெண் எப்படி சுய முடிவிற்கு வருகிறாள் , அதனால் அப்பெண்ணின் குடும்பத்தின் ஏற்படும் எதிர்வினைகள் நம்மை மேலும் சிந்திக்க வைக்கின்றன.
கதைகளை வாசிப்பவர்கள் சுந்தரராமன் மற்றும் அனுராதா. சுந்தரராமன் வானொலியில் பணி புரிபவர். இவர் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் இறுதி 5 போட்டியாளர்கள் வரை வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனுராதாவின் குரல் எனக்கு உமா பத்மநாபனின் குரலை நினைவூட்டியது. நல்ல வார்த்தை சுத்தமாக , நெளிவு சுழிவுகளை செம்மனே இருவரும் வாசிக்கின்றனர்.
இப்புத்தக்கம் கிழக்குப் பதிப்பகத்தின் மூலம் கிடைக்கும். இப்புத்தகத்தின் முன்னோட்டம் இங்கே:
இணையத்தில் வாங்க:
http://nhm.in/shop/978-81-8368-573-3.html
http://itunes.apple.com/WebObjects/MZStore.woa/wa/viewAudiobook?id=293065488&s=143441
நேரில் வாங்க:
வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
ஒரு முக்கியமான விஷயம் ஒலிப்புத்தகத்தில் அனைத்து கதைகளும் MP3 வடிவத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே இதனை நேரடியாக அனைத்து ஆடியோ சிடி பிளெயரிலும் ஓட்ட முடியாது என்பதை நினைவில் வைக்கவும்.

தமிழிஷ் தளித்தில் வெளிவந்த மறுமொழிகள்:
vbtc commented on your story ‘ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு (ஒலிப்புத்தகம்)’
‘நன்றி. புதிய தகவல்’
***
ohm commented on your story ‘ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு (ஒலிப்புத்தகம்)’
‘முன்னோட்டமே நன்றாக உள்ளது. Kettavudan vanga thundukirathu’