க்யூபா: 50 வருடமாக தொடரும் ’புரட்சி’

புரட்சி என்று சொல்லை சொன்னாலே பலரும் க்யூபாவுல என்ன நடக்குது தெரியுமா என்று தொடங்கிவிடுவார்கள். அங்க என்ன நடந்தாலும் பரவாயில்லை சாமி , நமக்கு சற்றே தெரியாத சில விஷயங்கல சொல்ல முயற்சிப்பதே இந்த பதிவின் நோக்கம்.

1959ல் பிடெலின் கம்யூனிச சோசியலிச கட்சி , பட்டிஸ்டா என்கிற சர்வாதிகாரியை , ஆயுத புரட்சி மூலம் தூக்கி எரிந்தது. இந்த புரட்சியின் 50வது வருடம் 2009.  உலக அளவில் போராட்டம் , புரட்சி , ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தல் என்று பலவற்றிக்கும் ஒரு உதாரண பிம்பமாகத் திகழ்வது பிடெல் காஸ்ட்ரோ மற்று சே குவேரா (இவர் அர்ஜண்டீனா நாட்டில் பிறந்தவர்).

 

சே என்பவர் புரட்சியாளர்களின் ராக் ஸ்டார் என்று சொல்லலாம். அழகான மெல்லிய தோற்றம். சீற்றம் நிறைந்த கண்கள். உலகில் எங்கு புரட்சி நடந்தாலும் அங்கு சென்று குரல் மட்டும் கொடுக்காமல் ‘கை’ கொடுத்து போராடினார். க்யூபா , காங்கோ மற்றும் பொலிவியாவில் போராடினார். 1964ல் ஐக்கிய நாடுகள் சபையில் க்யூபா சார்பாக பேசினார். கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் தான் சாவு என்பது போல் பொலிவியாவின் அரசு படைகளால் போராட்டத்தில் கொல்லப்பட்டார்.

 

 

பிடெலின் அமேரிக்க எதிர்ப்பு உலகறிந்ததே. அமேரிக்க சி.ஐ.ஏ (அடாவடி) நிறுவனம் பல முறை காஸ்ட்ரோவை காலி செய்ய போட்ட சதி திட்டங்கள் , உலக வரலாற்றில் இடம் பெறக்கூடியவை. இருப்பினும் அந்த சவால்களை சமாளித்து 2008 ஆண்டுவரை புரட்சி சிம்மாசனத்தில் ஆட்சி செய்து வந்தார் காஸ்ட்ரோ. பின் உடல் நலம் சரியில்லாததால் தம்பியிடம் இப்பொழுது பொறுப்பைக் கொடுத்துள்ளார். இது தான் புரட்சியானு கேட்காதீங்க. விடை உங்களுக்கே தெரியும்.

 

 

 

 

***

1970களில் அங்கோலாவில் 3 பிரிவுகளாக உள் நாட்டு பூசல் நிலவியதில் க்யூபா தன் ராணுவத்தை அனுப்பி மார்க்சிய போராளிகளுக்கு உதவி புரிந்தது. ரஷ்யாவின் கைப்பாவையாக க்யூபாவை எண்ணியிருந்தவர்கள் இந்த வகை புரட்சி போரட்ட ஆதரவைப் பார்த்து சற்று கதி கலங்கினர். அங்கோலா போராட்டத்தில் 20,000 க்யூபா படைகள் உயிரிழந்தனர். ஒரு காலத்தில் ஸ்பெயின் ஆண்ட க்யூபாவில் , அடிமைகளாக கொண்டுவரப் பட்ட அங்கோலா மக்கள் தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காக உயிர் விட்டதில் வியப்பேதுமில்லை.

இந்த போராட்டத்தின் மூலமே தென் ஆப்பிரிக்காவின் ”அப்பார்த்தெய்ட்” [இன பிரிக்கை] எனப்படும் கொடுமையை விடுவிக்க பாடுபட்டது க்யூபா.  எனக்குத் தெரிந்து உலகில் எந்த நாடும் செய்யாது ஒரு புரட்சி. மனிதனில் ஏற்றத் தாழ்வுகளை களைய இது போல் இந்தியா ஸ்ரீலங்காவில் இறங்கியிருந்தால் என்றோ விடிவு கிடைத்திருக்கும் தமிழ் மக்களுக்கு.

***

ஒரு சர்வாதிகாரியை தூக்கி எரிந்துவிட்டு மீண்டு ம் ஒரு சர்வாதிகாரியாகவே க்யூபாவை ஆண்டு வந்தார் காஸ்ட்ரோ. ஸ்டாலினின் கூலாக் போலவே பல அரசியல் எதிரிகளை அடிமைச் சிறையில் தள்ளியவர் பிடேல் என்பதை மறுக்க முடியாது. இதில் 20,000க்கும் மேற்பட்டவர்கள் தப்ப முயற்சிக்கும் பொழுது கொல்லப்பட்டனர். க்யூபாவின் மருத்துவர்கள் , பொரியாளர்களை தன் அரசியல் கருவிகளாக காஸ்ட்ரோ பயன்படுத்துகிறார். அனைவருக்கும் இலவச மருத்துவம் என்ற அற்புதத்தை நிகழ்த்தினாலும் , ஒரு நோயாளி அறுவை சிகிச்சை என்றால் தானே படுக்கை முதல் தைக்கும் நூல் வரை கொண்டு செல்ல வேண்டும் என்று கேள்விப் பட்டேன்.

***

பி.பி.சி உலக சேவையின் கேட்க வேண்டிய ஒலிப்பதிவுகள் (ஆங்கிலத்தில்):

http://www.bbc.co.uk/worldservice/documentaries/2008/12/081229_brand_cuba_one.shtml

http://www.bbc.co.uk/worldservice/documentaries/2008/12/090102_brand_cuba_two.shtml

***

க்யூபாவின் முழு சரித்திரம்:

http://www.bbc.co.uk/worldservice/indepth/cuba.shtml

podcasts, அரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 4 மறுமொழிகள் »

4 பதில்கள் “க்யூபா: 50 வருடமாக தொடரும் ’புரட்சி’” க்கு;

  1. lightink Says:

    கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் தான் சாவு என்பது போல் பொலிவியாவின் அரசு படைகளால் போராட்டத்தில் கொல்லப்பட்டார்.

    வன்மையாக கண்டிக்கிறேன். சதி திட்டம் தீட்டிய அமெரிக்காவுக்கு என்ன தண்டனை?

    ஒரு சர்வாதிகாரியை தூக்கி எரிந்துவிட்டு மீண்டு ம் ஒரு சர்வாதிகாரியாகவே க்யூபாவை ஆண்டு வந்தார் காஸ்ட்ரோ. ஸ்டாலினின் கூலாக் போலவே பல அரசியல் எதிரிகளை அடிமைச் சிறையில் தள்ளியவர் பிடேல் என்பதை மறுக்க முடியாது.

    நடந்த எல்லா போது தேர்தலிலும் 95% வாக்கு பதிவாகி இருக்கிறது. இந்த தேர்தல் எல்லாம் உலக நாட்டு பார்வையளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. இதுவரை ஐ. நா. கூட கியூபாவின் தேர்தலை குறை கூறியது இல்லை. உங்களிடம் ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்.

    அனைவருக்கும் இலவச மருத்துவம் என்ற அற்புதத்தை நிகழ்த்தினாலும் , ஒரு நோயாளி அறுவை சிகிச்சை என்றால் தானே படுக்கை முதல் தைக்கும் நூல் வரை கொண்டு செல்ல வேண்டும் என்று கேள்விப் பட்டேன்.

    எங்கே கேள்வி பட்டிர்கள்? யார் சொன்னது? ஏதாவது கனவு கண்டீர்பிர்கள். உங்கள் கட்டுரை நல்ல நகைப்புக்
    கூறியது.

    2004ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் போல்ட்டன் கூறினார் “கியூபா குறிப்பிட்ட அளவிற்கு உயிரி ஆயுதத்தின் விளைவுகளை ஏற்படுத்தி வருவதைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்“.

    ஆகஸ்ட் 2006ல் அமெரிக்கா “கியூப மருத்துவ நிபுணர்கள் தற்காலிக விடுவிப்பு திட்டம்“ என்ற ஒன்றை அறிவித்தது. அதன்படி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் புதிய விதிகள் மாற்றப்பட்டது. வெளிநாடு வாழ் கியூப டாக்டர்கள், முடநீக்கியல் நிபுணர்கள், சோதனை கூட ஊழியர்கள், செவிலியர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள் அமெரிக்காவிற்கு வர நினைத்தால் விசேஷமான முறையில் கவனிக்கப்படுவார்கள் என்று மாற்றியது. (வெளிநாடுவாழ் 40,000 கியூப மருத்துவப் பணியாளர்களில் 200 பேர் கூட அமெரிக்காவின் இந்த ஆசை வார்த்தைக்கு பலியாகவில்லை)

    2000ம் வருடம் கவுதமாலாவில் கம்யூனிஸ்ட் எதிர்ப்புப்படை சிக்லோ ஓஓஐ என்கிற தினசரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. ‘கவுதமாலாவில் பணிபுரியும் 459 கியூப டாக்டர்களும் உடனடியாக வெளியேற வேண்டும். அவர்கள் மிகப் புனிதமான மருத்துவத்தொழிலை தங்கள் நடவடிக்கையின் மூலமாக கம்யூனிசத்தை பரப்ப பயன்படுத்துகிறார்கள்’.

    2004ல் ஹெய்ட்டியில் ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அரிஸ்டைடு கவிழ்க்கப்பட்டு புஷ் நிர்வாகத்தின் கைத்தடி, ஆட்சிப் பொறுப்பேற்றார். அமெரிக்கா ஹெய்ட்டியில் பணிபுரிந்த 525 கியூப டாக்டர்களை வெளியேற்ற நிர்பந்தித்தது. ஆயினும் அந்த அரசு அதற்கு இணங்கவில்லை.

    2005ல் ஹோண்டுராசில் அதன் அதிபர் மகுரோ, அமெரிக்க தூதரகம் மற்றும் ஹோண்டுராஸ் மெடிக்கல் அசோசியேசனின் நிர்பந்தத்திற்கு பணிந்து கியூப டாக்டர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பிற்கெதிராக அலைஅலையாக நாடு முழுவதும் தொழிற்சங்கங்களும், சமூக நல அமைப்புகளும் நடத்திய போராட்டங்களால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

    அப்படி என்னதான் இருக்கிறது இந்த கியூப டாக்டர்களிடம். லத்தீன் அமெரிக்க நாட்டு மக்கள் ஆட்சியாளர்களை மீறி இவர்களின்பால் காதல் கொண்டிருப்பதற்கும், அமெரிக்கா உயிரி ஆயுதம் என்று வெறுப்பை உமிழவும்; வாய்ப்பு கிடைத்தால் பிறந்த நாட்டைவிட்டு வர ஆசை காட்ட தனது சட்டத்தை மாற்றுமளவிற்கு இவர்களிடம் என்ன இருக்கிறது. அது வெறும் மருத்துவத்திறன் சார்ந்தது மட்டுமல்ல மக்களை நேசிக்கும் குணம் சார்ந்த மகத்துவமும் இணைந்தது. கியூப அரசு, புரட்சி அரசு இதை சாதித்து காட்டியிருக்கிறது.

    செல்வபுரி, வளர்ச்சியடைந்த நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் 417 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 330 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். இந்த ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 2007ம் ஆண்டில், கியூபாவில் 155 பேருக்கு அதாவது 50 வீட்டிற்கு ஒரு டாக்டர் இருக்கிறார். அதனால்தான் மிக வளர்ச்சியடைந்த நாடுகளுக்கிணையாகவும் அதை விஞ்சியும் பிறப்பின்போது குழந்தை இறப்பு விகிதம் பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் குறைவாகவும், ஆயுட்காலம் அதிகமாகவும் கியூபாவில் உள்ளது.

    இதை எப்படி சாதித்தார்கள். 1984-85ல் 120 முதல் 150 குடும்பங்களுக்கு ஒரு மருத்துவக்குழு உருவாக்கப்பட்டது. இதில் ஒரு டாக்டரும், ஒரு செவிலியரும் இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு மருத்துவமனை அமைத்துக்கொடுக்கப்பட்டது. இவர்கள் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு மருத்துவம் செய்வதோடு நின்று விடவில்லை. மருத்துவமனைக்கு வராதோரை அவர்கள் வீடு தேடிச்சென்று பரிசோதனை நடத்தி ஆலோசனைகள், காப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையளிப்பார்கள்.

    மக்களை நேசிக்கும் ஒரு அரசியல் அமைப்பு முறையில் இது சாத்தியமே என்பதை நிரூபித்திருக்கிறது சின்னஞ் சிறிய கியூபா. 2004ல் இப்படி 99 சதம் மக்கள் டாக்டரைச் சந்திப்பதையும், டாக்டர்கள் மக்களைச் சந்திப்பதையும் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.

    இவர்கள் தன்நாட்டு மக்களுக்கு மட்டும் சேவை செய்பவர்கள் அல்ல. 1963ல் பிரான்ஸின் காலனியாக இருந்த அல்ஜீரியா விடுதலைபெற்ற போது அங்கு மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது ஓடோடி உதவி செய்தது கியூபா. நிறவெறி தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க ஆதரவு படைகளால் தாக்கப்பட்ட போது அங்கோலாவிற்கு உதவி செய்தது கியூபா.

    ஹெய்ட்டியை ஜார்ஜ் புயல் தாக்கிய போதும், கவுதமாலா மற்றும் ஹோண்டுராஸை மிட்ச் புயல் தாக்கியபோதும் உள்ளடக்கிய பகுதிகளில் உயிர் காக்கச் சென்றவர்கள் கியூப டாக்டர்கள். நவம்பர் 2008 கணக்குப்படி 75 நாடுகளில் 38,000 கியூப மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் வேலை தேடி பிழைப்பு தேடி கூடுதல் சம்பளம் தேடி சொந்த நாட்டைவிட்டு ஓடியவர்கள் அல்லர். துயருறும் தன் சகோதரனுக்கு மருத்துவ உதவியளிக்கச் சென்றவர்கள். அதனால்தான் இவர்கள் வெனிசுலாவிற்குச் சென்ற போது அங்கிருந்த டாக்டர்கள் இவர்களுக்கெதிராய் போராட்டம் நடத்தினர். வெனிசுலா டாக்டர்களின் குற்றச்சாட்டு இது தான் “டாக்டர் தொழில் புனிதமானது. கடவுளுக்குச் சமமானது. பக்தர்களைத் தேடி கடவுள் ஓடுவது கடவுளைக் கேவலப்படுத்துவது. மருத்துவத்தின் மேன்மை யாருக்கு புனிதமென்று படுகிறதோ யாரால் அடையமுடியுதோ அவர்கள் அடைந்து கொள்ளட்டும்“. ஆனால், அங்குள்ள மக்கள் வெனிசுலா டாக்டர்களுக்கெதிராய் போராடி முறியடித்தார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் 29,000 டாக்டர்களை கியூபா உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இது தவிர 24,000 வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவச மருத்துவக் கல்வி வழங்கி வருகிறது. இவர்களில் 100 பேர் அமெரிக்க மாணவர்கள். இது தவிர வெனிசுலாவின் உதவியுடன் இன்னுமொரு 17,000 பேருக்கு மருத்துவக்கல்வியளித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக கியூபா 70,000 டாக்டர்களை உருவாக்குகிறது. அமெரிக்கா முழுவதிலும் மருத்துவ மாணவர்கள் ஆண்டிற்கு 64,000 முதல் 68,000 வரை தான். கியூபாவில் மருத்துவக்கல்வி அயல்நாட்டவருக்கு உட்பட இலவசம். அமெரிக்காவில் ஒரு மருத்துவ மாணவன் படித்துவிட்டு வெளியேறும்போது சராசரியாக 1,40,000 டாலர் கடனுடன் வருகிறான். அதாவது இந்திய ரூபாயில் 70 லட்சம். மருத்துவம் தொழிலா? சேவையா? என்பதை கற்பிக்கும் முறையும் இடமும் செலவும் கற்றுக்கொடுத்து அனுப்புகின்றன. பணம் கொழிக்கும் மருத்துவத்தொழிலை இலவசமாக கற்பிப்பதா என்ற கேள்வி எழும். தொழில் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்ல. மனிதனை நேசிக்கவும் கற்றுக்கொடுக்கிறார்கள்.

    சேகுவேரா சொன்னார் “கேலி செய்யப்படும் வாய்ப்பிருக்கிறது என்ற போதும் நான் சொல்கிறேன் உண்மையான புரட்சிவாதி மனித இனத்தின் மீதான காதல் உணர்வாலேயே வழி நடத்தப்படுகிறான்“.

    2000ம் ஆண்டு மே தின விழாவில் தோழர் பிடல் காஸ்ட்ரோ பேசுகையில் குறிப்பிட்டார், “நம் நாட்டின் புரட்சி வென்றதற்கும், நீடிப்பதற்கும் நமது புரட்சியின் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான திறனை நாம் கொண்டிருக்கிறோம். அதற்கான காரணம் ‘கருத்துப் போராட்டத்தை’ நடத்தவும் அதில் வெற்றி பெறவும் நமக்கிருக்கும் ஆர்வம்“ ஆம்! கியூபா மருத்துவத்துறையிலும் அதைத் தான் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

    கியூப கலாச்சாரத்துறை அமைச்சர் ஏபெல் பிரிட்டோ 2004ல் ‘உலகமயம்’ பற்றி விளக்கியது இங்கு குறிப்பிடத்தக்கது. “நாங்களும் உலகமயத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். உலகமயமாக்கப்பட வேண்டியது குண்டுகளும் வெறுப்புகளுமல்ல; அமைதி, ஒத்துழைப்பு, சுகாதாரம் அனைவருக்குமான கல்வி போன்றவையே உலகமயமாக்கப்படவேண்டும்.”

    1960 ஆகஸ்ட் 19ல் சேகுவேரா புரட்சிகர மருத்துவம் பற்றிபேசும்போது “சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பட்டம் பெற்ற டாக்டர்களை கிராமப்புற சேவைகளுக்கு அனுப்பினோம். அவர்கள் கூடுதல் பணம் கேட்டார்கள். அதைக் கொடுத்த பிறகுதான் கிராமப்புற சேவைக்கு சென்றார்கள். இவர்கள் வசதியான வீட்டுப்பிள்ளைகள். ஏழை மக்களுக்கும், விவசாயிகளின் பிள்ளைகளுக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் தங்கள் மக்களுக்குச் சேவை செய்ய உற்சாகத்துடன் ஓடுவார்கள். அதில் மட்டும் நாம் வெற்றி பெற்றால் ஒரு புதிய ஆயுதத்தை பெற்றவர்களாவோம். அது சகோதரத்துவம் என்னும் ஆயுதம்“ என்றார்.

    கியூபா அந்த ஆயுதத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்காவில் அது வெற்றிவாகை சூடிக்கொண்டிருக்கிறது.

    அந்த ஆயுதத்தின் விளைவு ‘உயிரி ஆயுதம்’ பயன்படுத்துவதைப் போன்றது அதைத்தடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் போல்ட்டன் கூறுவதும் அதனால் தான்; ஹோண்டுராஸ், ஹெய்ட்டி, கவுதமாலா, வெனிசுலா இன்னும் பல நாட்டு மக்கள் அந்த ஆயுதத்தை நேசிப்பதும் அதனால்தான்.

    தோழர் காஸ்ட்ரோ சொன்னது போல் புரட்சி என்பது “தான் மனிதனைப் போல் நடத்தப்படுவதும், மற்றவர்களை மனிதனைப்போல் நடத்துவதும் புரட்சி“ என்றார். இதை ஏற்போருக்கு இது காக்கும் ஆயுதம், எதிர்ப்போருக்கு ‘உயிரி ஆயுதம்’. இவ்வாயுதம் உலகம் முழுவதும் பிரயோகிக்கப்படட்டும்.

    (இக்கட்டுரை சகோதரத்துவம் என்னும் இறுதி ஆயுதம் என்கிற டீவ் ப்ரோவெர், ஜனவரி 2009 மன்த்லி ரிவ்யூ பத்திரிகையில் எழுதிய கட்டுரையைத் தழுவியது.)

  2. bmurali80 Says:

    உங்கள் நீண்ட மறுமொழியிலிருந்து எனக்குப் புலப்படுவது ஒன்று தான். நான் ஏதோ க்யூபா நாட்டை கேவலப்படுத்துவதாக நீங்கள் எண்ணியுள்ளீர்கள். அதுவல்லவே என் நோக்கம். இரு பக்கத்தையும் தெளிவாகத்தான் எடுத்துரைத்துள்ளேன். அங்கோலா போராட்டம் பற்றி ஒரு வரி கூட நீங்க சொல்லலையே…

    ***

    முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசினால் ஹிந்துத்துவ தீவிரவாதத்தையும் பற்றியும் பேச வேண்டும் (பொலிடிக்கல் கரெக்டனஸ்) அதற்கு இணங்க க்யூபா பற்றி பேசினால் எதுக்கு அமேரிக்கா அமேரிக்கா என்று அடித்து கொள்கிறீர்கள். அமேரிக்கா க்யூபா விஷயத்தில் அடாவடி தான் என்று சொல்லி இருக்கிறேனே ! அமேரிக்காவுக்குத் தான் தண்டனையாக வியட்னாம் அமைந்ததே.

    க்யூபா மருத்துவர்களை கம்யூனிஸம் பறப்பும் ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்துகிறது என்பது உலகறிந்த உண்மை, இதனை சான்றுகள் தந்து வேறு விளக்க வேண்டுமா ? அமேரிக்கா மிஷனரிகளை எப்படி பயன்படுத்துகிறதோ அதே போல் க்யூபாவும் மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களை பயன்படுத்துகிறது. மிஷனரிகள் மனிதத்துடன் நடப்பதில்லையா , சேவைகள் செய்வதில்லையா ? அடிப்படை அரசியலைச் சொன்னால் குற்றமா ?

    ***

    பொதுவாக க்யூபாவில் மருத்துவம் பெற வேண்டுமென்றால் நோயாளி தான் மருந்துகளை எடுத்து செல்ல வேண்டும். நம் பொது நல மருத்துவமனைப் போல. அதெல்லாம் எதுக்கு ஆஸ்பரின் கூட அவசரத்துக்குக் கிடைக்காதுங்க அங்க. அங்கு நிலவும் இரண்டு அடுக்கு மருத்துவ திட்டம் பற்றி தெரியுமா ?

    ***

    லைடிங்க் உங்கள் பல கட்டுரைகள் இந்த கட்டுரையைவிட நகைப்புக்குறியது. அதற்கெல்லாம் பலர் கேட்ட கேள்விகளுக்கு ஒரு பதில் கூட சொன்னதில்லை ஆனால் க்யூபா பற்றி சில ஆதரவில்லாத விஷயங்களை எழுதியதும் ரஜினி ரசிகரை விட ஆவேச படுகிறீர்கள் !

    சான்று: க்யூபாவில் 95% வாக்கு பதிவு அதனால் சர்வாதிகாரமில்லை!சதாம் உசேன் கூட பெறுவாரியான வாக்கு பெற்றார். நம்ம ஊருல ஜே , கலைஞர் எல்லாம் உட்கட்சி தேர்தல் நடத்துறாங்க! இப்படித் தான் ஜனநாயகம் வாழனுமா ?

    க்யூபாவில் 160 உருப்பினர்களும் போட்டியின்று தேர்வு

    http://news.bbc.co.uk/2/hi/americas/46399.stm

    // Voting is not mandatory in Cuba, but it is presented by authorities as a moral and patriotic duty.//

  3. lightink Says:

    \\ஆனால் க்யூபா பற்றி சில ஆதரவில்லாத விஷயங்களை எழுதியதும் ரஜினி ரசிகரை விட ஆவேச படுகிறீர்கள் !\\

    என்னுடைய கட்டுரையை படித்து விட்டு கேள்வி கேட்பவருக்கு நான் அவர்கள் மின் அஞ்சளுக்கு பதில் அனுப்பிவிடுவேன். என்னென்றால் பெரும்பாலும் அவை நீளமாக இருக்கும்.

    ஆதாரம் இல்லாமல் எழுதும் கட்டுரை என்று நீங்களே ஒத்துக்கொண்டதற்க்கு மிகவும் நன்றி உங்களை எண்ணி
    நான் பெருமைபடுகிறேன்.

    இருண்டுபோன இந்த உலகில் என்னுடைய கட்டுரை சிலருக்கு நகைப்பு தருவதாக இருந்தால் அதையும் எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    • bmurali80 Says:

      //ஆதாரம் இல்லாமல் எழுதும் கட்டுரை என்று நீங்களே ஒத்துக்கொண்டதற்க்கு மிகவும் நன்றி உங்களை எண்ணி
      நான் பெருமைபடுகிறேன்.//

      ஆதராமில்லையா…இங்கு கொடுத்துள்ள ஒலிப்பதிவுகள் , சுட்டிகள் எல்லாம் கண்ணுலபடுதா ?… சரி விடுங்க , உங்களுடன் விவாதம் செய்ய எனக்கு நேரம் பத்தாது. இன்னும் ஜம்பமா ரசிகர் மன்றத்தை நீங்க நடத்தலாம். க்யூபா உங்களுக்கு வேண்டுமானால் இருண்ட உலகமாக இருக்கலாம் எனக்கல்ல.


மறுமொழிகள் இட இயலாது.