
கண்ணீர் ரணமானது
சில தவறுகள் என்றுமே நடந்துவிடக் கூடாது என்பதை சரித்திரம் மீண்டும் மீண்டும் பாடம் எடுக்கிறது. ஆனால் மனிதன் அதனைக் கற்றுக் கொண்ட பாடில்லை.
இரு இன வாதிகள் போரிட்டால் என்ன நடக்கும் ? நாடே பன்றிகளைப் போல் இனவாதம் எனும் சேற்றில் உழன்று கொண்டிருக்கும். மக்களிடையே இனத்தாலோ , சாதியாலோ , நிரத்தாலோ பிளவு ஏற்பட்டுவிட்டால் என்றுமே அம்மக்கள் ஒற்றுமையுடன் வாழ முடியாது. பிறகு ’இட ஒதுக்கீடு’ , மைநாரிட்டிகளுக்கு சலுகை என்று சலுகையை எதிர்ப்பார்ப்பவர்களாக அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் அல்ல கட்டம் கட்டபடுகிறார்கள்.
யூதர்களுக்கு ஹலோகாஸ்ட் , கருப்பர்களுக்கு வெள்ளையனின் நிரவெறி என்ற வரிசையில் தமிழனுக்கு சிங்களனின் இனவாதம் என்பது சரித்திரத்தில் அழியாத ரணம்.
இந்த ரணம் இரு முனைக் கொண்டது.
***
உதாரணமாக மியான்மர். அந்நாட்டில் இராணுவத்திற்கு எதிராக நடந்த சமீபத்திய போராட்டத்தில் புத்த துறவிகள் மிகவும் மென்மையான முறையில் போராடினார்கள். உண்ணாநிலை , அறவழியில் கூட்டங்கள் என்று நடத்தினார்கள். துப்பாக்கி முன் நின்றும் வெறும் காவி துணியுடன் தன் மனவலுவை மட்டும் நம்பி நின்ற இந்த வீரர்களுக்குக் கிடைத்தது என்ன ? அடியும் உதையும். இதில் பலர் காணாமல் போயுள்ளனர். இருக்கவே இருக்கிறார் அகிம்சாவாதி சூ கி. வீட்டுச் சிறையில் பல்லாண்டுகளாக.
உலக நாடுகளால் மியன்மார் சர்வாதிகாரிகளை என்ன செய்ய முடிகிறது ?
அடுத்து டிபெட், இதே பௌத்த மதத்தின் மென்மையான கொள்கையினை முன்நிறுத்துபவர் தான் தலாய் லாமா. ஆனால் அவரால் இன்று வரை டிபெட் என்ற நாட்டின் தனித்துவத்தை நிலைநாட்ட முடியவில்லை.
ஆனால் பௌத்த மதம் அகிம்சையை மட்டும் கற்பிக்கவில்லை என்பதற்கு இன்றைய இலங்கை போதுமானது.
1950க்குப் பின் தென்னாப்பிரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் அகிம்சா வழியில் விடுதலை அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களும் நெல்சன் மண்டேலா விடுதலையாகும் வரை வன்முறையை பல நியாயங்களுடன் போராட்ட முறையாகக் கொண்டிருந்தனர் என்று குறிப்பிடத்தக்கது.
ஆனால் இத்துனை அமைதிப் போருக்கும் உலக அளவில் இன்று வரை ஆதரவு கவிழ்ந்ததில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
***
இருப்பினும் , கருப்பர்கள் எல்லாம் பாவமானவர்கள் , தமிழர்கள் எல்லாம் நெறியுடையவர்கள் , யூதர்கள் எல்லாம் பரந்த மனப்பான்மையுள்ளவர்கள் என்று சரித்திரத்தைக் காட்டி பொத்தாம் பொதுவாக எமொஷனல் பிளாக்மெயில் செய்வதும் தவறு.
வாட்டிகனின் கதோலிக்க சித்தாந்தங்களை எதிர்க்க கலிலியோ அறிவியலை ஆயுதமாக்கினான். ஷேக்ஸ்பியரோ லத்தின மொழியைவிட்டு ஆங்கிலத்தில் இலக்கியம் படைத்தார். இப்படி ‘அகிம்சை’ முறையில் எதிர்ப்பவர்கள் சரித்திரத்தில் நாயகர்களாக எந்த விளக்கமுமின்றி பொது மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களுக்கு எத்தகையத் சம்பாஷனைகள் தேவைப் படுகிறது பாருங்கள் – பொது மக்களின் பொருட்செல்வம் , பொய்யான ஊடக பிம்பம் மற்றும் பிரச்சாரம் , அரசியல் பகடைக் காய்கள் மற்றும் என்றும் குறையாத மக்கள் ஆதரவு. இது போதாதென்று தலைவனுக்காக உயிர் கொடுக்க அப்பாவிகள்.
போராடுபவர் பக்கம் அதிகாரமோ அரசாங்கமோ இல்லாத நிலையில் பொது மக்களின் ஆதரவை என்றுமே போராட்ட இயக்கங்கள் இழக்காமல் இருப்பதே அந்த போரட்டத்திற்கு செய்யும் நீதியாகும். தலையை மட்டுமே சுற்றி நடக்கும் போராட்டம் சர்வாதிகாரத்திற்கே வித்து. அத்துடன் இனவாதம் சேர்ந்தால் , நினைத்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது !
