முதலில் புனைவிலக்கியத்திற்கான சில மேற்கோள்களைக் காண்போம்
புனைவு என்பது எப்படி விளக்குவது? சரியாகச் சொல்வதனால் புனைவு என்பது பல உண்மைகளை ஒன்றாக்கிப் பொய்ம்மையெனக் காட்டும் மாயம்; அதே நேரத்தில் கதைக்குள் இருக்கும் எல்லாமும் பொய்யல்ல; கதை நிகழும் வெளி கதையில் சொல்லப்படும் அந்த இடமாக இருக்காது. பொய்யான ஒரு வெளியாக அமையும். நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் அந்நிகழ்வு நடந்ததாக இல்லாமல் இருக்கலாம். பாத்திரங்களின் பெயர்களும் மாற்றம் பெற்றிருக்கலாம். எல்லாவற்றையும் மாற்றம் செய்து விடும் வேலையைத் திறம்படச் செய்யும் ஆசிரியன் புனைவில் தேர்ச்சி பெற்றவனாகிறான்.
என்கிறார் அ.ராமசாமி உயிரோசையில்
எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துடன் நேர்காணலில் பேசிய பொழது Alice Munro கூறுவதைக் கேளுங்கள். அவர் சமீபத்தில் Man Booker பரிசை வென்றவர்
நான் புனைவு இலக்கியம்தான் படிப்பேன். அது முக்கியமானது. நல்ல இலக்கியத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தயங்கமாட்டேன். அவற்றில் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. செக்கோவை நான் எப்பொழுது வேண்டுமானாலும் படிப்பேன். சமீபத்தில் தல்ஸ்தோயின் War and Peace நாவலை இன்னொரு தடவை ஆரம்பத்திலிருந்து ஆற அமரப் படித்து முடித்தேன். இது ஒரு தடவை படித்துவிட்டு மூடிவைக்கும் சமாச்சாரம் அல்ல. புனைவு படிப்பதுதான் என்னுடைய மூளைக்கு வேலை கொடுக்கிறது. என்னை ஆசுவாசப்படுத்த, மனநிலையைத் தளரவைக்க மட்டும் நான் non-fiction படிக்கிறேன்.
ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை மனிதன் புனைவு இலக்கியத்தில்தானே நாட்டம் செலுத்தியிருக்கிறான். தலைமுறை தலைமுறையாகப் புனைவுக் கதைகள்தானே சொல்லியிருக்கிறான். பழம்பெரும் இதிகாசங்கள் எல்லாம் புனைவுதானே.
Barbara Tuchman என்ற எழுத்தாளரின் கட்டுரை இலக்கியம் எனக்குப் பிடிக்கும். அவர் முப்பது வருடங்களுக்கு முன் பிரபலமானவர்; இரண்டு புலிட்ஸர் பரிசுகள் பெற்றவர். இவருடைய Guns of August என்ற நூலை ரசித்துப் படித்திருக்கிறேன். ஆனால், தீவிரமான படிப்புக்கு நான் எப்போதும் நாடுவது புனைவு இலக்கியத்தைத்தான்.
இலக்கியவாதியும் எழுத்தாளருமான அம்பை கூறுவது
என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ‘உண்மகளை’ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த ‘உண்மை’யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும், அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும், உணர்வுகளை இலக்கியமாக்குகிறது. இந்த வெளிப்படை-மறைப்பு இவற்றின் கண்ணாமூச்சிதான் இலக்கியம் – தென்றல் ஜூலை 2009 இதழ்
தீராநதியில் எழுத்தாளர் சாரு நிவேதிதா
என் நண்பர் மனுஷ்ய புத்திரன் அடிக்கடி கூறுவார் ; ‘ எவனொருவன் ஒரு கலைப் படைப்பை அணுகும்போது அது உண்மையா , பொய்யா ?’ என்று கேள்வி கேட்கிறானோ அவனோடு எனக்கு எந்த சம்பாஷணையும் சாத்தியமில்லை ’ என்று. நான் ஒரு கலைஞன். நான் பொய்யை எழுதுவேன் ; உண்மையை எழுதுவேன். எதை வேண்டுமானாலும் எழுதுவேன். கலைஞன் என்பவன் உலக மக்களின் சுபிட்சத்திற்காக தன் சட்டைப் பையில் பல உண்மைகளை வைத்து விநியோகித்துக் கொண்டிருப்பவன் அல்ல , உண்மையைச் சொல்வது என் வேலை அல்ல. அதற்குப் பல தீர்க்கதரிசிகளும் உபதேசிகளும் இருக்கிறார்கள்
[தொடரும்]
Tags: A. Muthulingam, A.Ramasamy, Alice Munro, Ambai, அ. முத்துலிங்கம், அ.ராமசாமி, அம்பை, சாரு நிவேதிதா, புனைவு, Charu Nivedita, Fiction

ஜூலை 23, 2009 இல் 9:13 பிற்பகல்
[...] சாம் தான் இதில் அதிகாரம் எனும் ரசவாதியிடம் சிக்கிக் கொண்ட எலி என்பது போல எஸ்.ரா. நிருவ முயல்கிறார் ஆனால் கதை முடிவில்லாமல் நிற்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு வேறு மாதிரி தோன்றினால் தெரிவியிங்கள் ! புனைவின் தேவை [...]