நிலைமாற்றம்

மொழி சீரான ஓட்டத்திற்காக , கிரந்தம் கலந்தும் எழுதலாம் என்பதே எனது நிலை. ஆனால் அது எந்த அளவுக்கு விபரீதத்தில் மொழியைக் கொண்டு செல்கிறது என்பதைக் காணவே இப்பதிவு. மேலும் தமிழ் விக்கியின் சில நிர்வாகிகள் குறித்து சில எண்ணங்கள்.

திராவிட மொழி அரசியலின்றி , சமஸ்கிரத காழ்ப்பின்றி மொழியின் அழகியலை அனுபவிக்கவும் , பரப்பவும் நம் தமிழ் மொழிக்காக இணையத்தில் சிலர் உள்ளனர். இவர்களில் சிலர் கிரந்தம் தனக்குத் தேவையில்லை என்ற நிலையை எடுத்துள்ளனர்.  கிரந்தம் தேவையென பல்லவர்கள் பிரபலப் படுத்தினாலும் அதன் தேவையின்றி பல ஆக்கங்கள் அக்காலம் முதற் கொண்டே வெளிவந்துள்ளன.

இவர்களை மொழித் தாலிபான்கள் எனத் தரக்குறைவாக பட்டம் கட்ட நினைப்பவர்கள் தான் உண்மையில் தங்களைத் தானே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

மொழி ஆர்வலர்களின் பங்களிப்பு தமிழ் கணிமை முதல் , இணையத்தில் கட்டற்ற களஞ்சியத்தை நிர்வகித்தல் , உலவியில் தமிழின் முதல் அகராதி தயாரிக்கும் முயற்சி வரை அவர்களின் வாழ் நாளில் கணிசமான நேரத்தை செலவழித்து வருகின்றனர். நவயுகத்தில் கணினி மயமாக்கம் எங்கும் பரவிக்கிடக்கும் இன்றைய நிலையில் இவர்களின் பணிப் போற்றத் தக்கதே.

சிக்கல்

அச்சூடகத்தில் – தமிழ் சிற்றிதழ்களில் தான் தமிழ் மொழிக்கான அடையாளம் இன்றும் இருக்கிறது.

வரும் 10 ஆண்டுகளில் , இன்று பரவலாகப் படிக்கப் படும் தமிழ் இதழ்களால் , இன்று நாம் காணும் தமிழ் மலினமாகி விடும் என்பதே நிதர்சணம். தமிழ் மொழியைப் பற்றி விவாதம் நடத்தும் பொழுதே (விஜய் தொலைக்காட்சியில்) தமிழில் மட்டும் பேச முடியாமல் திணறும் சமுதாயம் இன்று சென்னையில் உள்ளது ! இதனை விட மொழிக்கு என்ன கேவலம் இருக்க முடியும்.(இதே நிலை தெலுங்கிற்கு ஐதிராபாத்திலும் இருப்பதாக என் நண்பர் வருத்தப் பட்டார். )

ஒரு பத்தி தமிழில் படிக்க ‘கடுமையாக’ இருந்தால் ‘தனித்தமிழ்’ இயக்க வாதிகள் மொழியைக் கொல்கிறார்கள் என பதரும் மொழிக் காப்பாளர்கள், அவ்வாக்கியத்தை எப்படி எளிமையாகவும் மென்மையாகவும் மாற்ற முடியும் என்பதை ஏன் சொல்ல முன் வருவதில்லை ? மட்டம் தட்ட மட்டும் முதலில் நிற்பவர்களுக்கு எளிமை படுத்துவதென்றால் ஆங்கிலமாக்குவதா ?

கிரந்தம் தவிர்த்து எழுதுபவர்கள் தாலிபான்கள் எனில் கிரந்தம் கலந்து தான் எழுதுவேன் என்பவர்கள் கற்கால மனிதர்களா ?

கிரந்தமில்லாமல் எழுதலாம் என்கிற இயக்கம் எந்த அரசியல் அடிப்படையிலும் இன்று இணையத்தில் செயலாற்றவில்லை என்பதை என் ஒரு வருட இணைய இயக்கத்தில் காண்கிறேன்.

மொழியில் சீர்நிலையில்லாதது இன்றைய கணினி யுகத்தில் பெரும் சிக்கல்.

பிரச்சனை – பிரச்னை – பிரச்சினை என ஆளாளுக்கு ஒரு சொல்லைத் திரித்தால் எப்படி ஒரு மென்பொருள் சொல் திருத்தியயை உருவாக்க இயலும் ? சிக்கல் என்ற சொல்லினை பயன்படுத்தினால் சாலச் சிறப்புயென்றாலும் அதனை ஒரு அறிவுறுத்தாலாகவே முன் வைக்க விரும்புகிறேன்.  திட்டப்படுத்த முயலவில்லை.

விக்கியின் சில நிர்வாகிகள் குறித்து சில எண்ணங்கள்

கிரந்தமில்லாமல் எழுதுபவர்கள் செய்த ‘தவறு’ ஒன்றே என நினைக்கிறேன். ஒரு பொது தளத்தின் நிர்வாகியாக இருந்து கொண்டு கிரந்தத்தைப் பற்றி பொத்தாம் பொதுவாக பதிவுகள் எழுதியது பலரது மனத்திலும் ஐயத்தை எழுப்பியிருக்கிறது. இதனைக் களையவே இப்பொழுது பல மணித்துளிகள் செலவு செய்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மேலும் அவர்கள் ‘தா’ பற்றி யாராவது ஒரு சொல் உதிர்த்தால் அதற்கு விளக்கம் கொடுக்கத் தொடங்கி அதுவே வாய்க்கா வரப்பு விவாதமாகி விடுகிறது. அவதூறுகள் எனத் தெரிந்தால் அதனை புறம் தள்ளுவதே நன்று.

பொது வெளியில் , மேலும் அவதூறுகள் ஏற்படாமல் விக்கியைப் பாதுகாக்க வேண்டியது இவர்களின் தார்மீகப் பொருப்பு என கருதுகிறேன்.

***

குறிப்பு – நான் கிரந்தம் பற்றி முதிர்ச்சியின்றி ஏதாவது முன்னர் சொன்னதை இங்கே கொண்டு வந்து காட்ட வேண்டாம்.

அரசியல், சமூகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 2 மறுமொழிகள் »

2 பதில்கள் “நிலைமாற்றம்” க்கு;

  1. ரவிசங்கர் Says:

    //திராவிட மொழி அரசியலின்றி , சமஸ்கிரத காழ்ப்பின்றி மொழியின் அழகியலை அனுபவிக்கவும் , பரப்பவும் நம் தமிழ் மொழிக்காக இணையத்தில் சிலர் உள்ளனர். //

    //கிரந்தமில்லாமல் எழுதலாம் என்கிற இயக்கம் எந்த அரசியல் அடிப்படையிலும் இன்று இணையத்தில் செயலாற்றவில்லை என்பதை என் ஒரு வருட இணைய இயக்கத்தில் காண்கிறேன்.//

    புரிதலுக்கும் நிலை மாற்றத்துக்கும் நன்றி.

    //ஒரு பத்தி தமிழில் படிக்க ‘கடுமையாக’ இருந்தால் ‘தனித்தமிழ்’ இயக்க வாதிகள் மொழியைக் கொல்கிறார்கள் என பதரும் மொழிக் காப்பாளர்கள், அவ்வாக்கியத்தை எப்படி எளிமையாகவும் மென்மையாகவும் மாற்ற முடியும் என்பதை ஏன் சொல்ல முன் வருவதில்லை ? மட்டம் தட்ட மட்டும் முதலில் நிற்பவர்களுக்கு எளிமை படுத்துவதென்றால் ஆங்கிலமாக்குவதா ?//

    இது தான் எங்கள் மனதிலும் உள்ள கேள்வி.

    //விக்கியின் சில நிர்வாகிகள் குறித்து சில எண்ணங்கள்//

    நேரடியாகவே என் பெயரையும் சொல்லி இருக்கலாம் :)

    கிரந்தம், தனித்தமிழ் உரையாடல்கள் விக்கிக்கு வெளியே உள்ள பொது வெளியிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. விக்கியின் நிருவாகியாக இருப்பதாலேயே அவற்றைப் பேசாமல் இருக்க முடியாது. உண்மையில், விக்கியின் நிருவாகியாக இல்லாவிட்டால் இன்னும் தீவிரமாக பேச, எழுத முடியும் :)

    பிழையான புரிதல், பரப்புரைகளால் உண்மை நிலவரம் அறியாமல் நடுநிலையாளர்கள் கூட குழம்பும் போது விளக்கம் தருவது அவசியம் ஆகிறது. பொது மக்கள் தொடர்பும் இது போன்ற திட்டங்களில் ஒரு பகுதி தானே?

    வருங்காலத்தில், இயன்றவரை விளக்கம் அளிப்பதைத் தவிர்த்து ஆக்கப் பங்களிப்புகளில் செயல்படவே விரும்புகிறோம். நன்றி.

  2. bmurali80 Says:

    வருகைக்கு நன்றி, ரவி.

    செல்வா அவர்களுக்கும் சொல்ல நினைத்ததால் ‘சில’ என குறிப்பிட்டேன்.


மறுமொழிகள் இட இயலாது.