Up in the air

மூன்று வெவ்வேறு வாழ்க்கைப் படிநிலைகளில் உள்ள நபர்களை வான்வெளி பயணம் சந்திக்க வைக்கிறது.

பந்தம் பாசம் உறவு சிக்கல்கள் இவையெல்லாம் தேவையற்ற சுமைகள் என வாழும் ரையன் பிங்கம் (ஜார்ஜ் குளூணி). எந்த வயதில் எப்படிப்பட்டக் கணவர் அமைவார் , கணவரின் முதல் பெயரின் மாத்திரையொசை வரை திட்டமிட்டு வாழ நினைக்கும் 23 வயது நாட்லி கீணர் (அனா கேன்டிரிக் ). கணமற்ற உறவுகளை நாடும் நடுத்தர வயது பெண்ணாக அலெக்ஸ் (வெரா வார்மிகா).

உறவுகளை உதரிவிட்டு வாழ்வதாக நினைக்கும் ரையன் மீண்டும் மீண்டும் அந்த கோட்பாட்டினை கேள்வி கேட்கும் விதமாக பல தருணங்கள் அமைகின்றன. தன் பல மில்லியன் வான்வெளிப் பயணங்கள் ஒன்றில் அலெக்ஸ் என்பவரை சந்திக்கிறார். இருவருக்கும் வானில் ஊரூராக செல்லும் பணி. அப்பயணங்களில் அவர்கள் சேர்த்து வைத்துக் கொண்ட லாயல்டி கார்டுகளை வைத்து பேசத் துவங்கி கலவி வரை செல்கிறது முதல் நாள் உறவு. இருப்பினும் இது சாதாரண உறவுக்கு மேலாக இருக்கலாம் என ரையன் எண்ணுகிறான். அலெக்ஸ் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ரையனின் வேலை மற்றவர்களின் வேலை ‘காலி’யாகிவிட்டது என எடுத்து சொல்லும் பணி. கிட்டதட்ட அமீனா போல ஊரூராக சென்று தினமும் வேலையிழந்தவர்களிடம் அத்தகவலை திடமாக சொல்ல வேண்டிய ஈவு இறக்கமற்ற பணி. பல்லாண்டுகளாக அப்பணியில் இருந்த பலனால் பல மில்லியன் வான் மைல்களை சேகரித்து வைத்துள்ளான்.

பெரிதும் எதிர்பார்ப்பற்ற அவன் வாழ்க்க்கையில் ஒரே குறிக்கோள் அமேரிக்கன் ஏர்லையன்ஸ் ‘கான்சியார்ஜ்’ கார்டை அடைய வேண்டும் என்பதே. அதற்கு 10 மில்லயன் மைல்கள் வானில் பறந்தாக வேண்டும். இதன் முன் வேறும் 6 பேர் மட்டுமே செய்த சாதனை அது.

நாட்லி , ரையன் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த நிர்வாகி. பயணச் செலவுகளைக் குறைக்க வீடியோ அரட்டைப் போதும் என்று நினைக்கிறாள். அதனை சோதனை ஓட்டமும் செய்து காட்டுகிறாள். ரையனுக்கு அதில் சுத்தமாக உடன்பாடில்லை. ஒரு மனிதனின் மிகவும் பலவீனமான தருணம் வேலையிழப்பது தான் அதனை இவ்வளவு இயந்திரத்தனமாக செய்வது சாத்தியமற்ற செயல் என்கிறான்.

பின் ரையனின் மேலாளர் பணிக்க இருவரும் ‘செய்தி சொல்லும்’ வேலைக்கு இணைந்து செல்கின்றனர். வேலையிழந்த செய்தியைக் கேட்டு மனம் வேம்பி புலம்பும் மக்களைக் கண்டு திடுக்கிடுகிறாள் நாட்லி. அதில் ஒருவர் மிகவும் அமைதியாக ‘நான் தற்கொலை செய்யப் போகிறேன்’ என்கிறார்.

ரையன் 10 மில்லியன் மைல் கனவு நிறைவடையுமா ? நாட்லி தனது வீடியோ திட்டத்தில் முழு வெற்றி கிட்டுமா ? அலெக்ஸ் ரையன் உறவு எங்கு செல்கிறது என்பன மீதிக் கதை.

****
படத்தின் கதை ஒரு வித வெறுமைக்கு பாய் விரிக்கும் வேலையைச் செய்கிறது. ஒரு கட்டத்தில் ஏன் ரையன் போல ஒண்டிக்கட்டையாக வாழக்கூடாது ? குடும்பம் குழந்தை என ஏன் திண்டாட வேண்டும் என்கிற எண்ணம் எழுவது தவிர்க்க முடியாதது. கதையின் பின் பகுதியில் ரையன் மூலமே அவ்வெண்ணத்திற்கு முடிவு கட்டப்படுகிறது.

நடிப்பு என்ற வகையில் ஜார்ஜ் குளூணிக்கு இரண்டே வகையான முக பாவம் தான் இருக்கிறது. ‘Smirk’  என குறிப்பிடப்படும் நக்கலான சிரிப்பு அதில் பிரதானம். 23 வயது நிர்வாகியாக வரும் அனா கேன்டிரிக் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் அவர் எப்பொழுதும் ஜார்ஜின் நிழலில் நிற்பது போல ஒரு உணர்வும் நம்மிடம் ஏற்படுகிறது. அலெக்ஸாக வரும் வெரா வார்மிகாவின் நடிப்பு ஜார்ஜ் குளூணியைவிட நன்றாக இருந்தது.
படம் ஒரு முறை பார்க்கலாம்.