மாதவன் நாயர் பற்றி தொடர் ஆலாபனை நடந்து வருகிறது. ‘நன்றி!’, ’இதற்கு முன் மறைக்கபட்ட தலைவர்’, ‘புரட்சி’ என வழக்கம் போல தொண்டர் அடிப் பொடியாக அணிவகுத்து மடாதிபதிக்கு காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.
சில சந்தேகங்கள் -
1. எப்பொழுதும் கைத்துப்பாக்கியுடன் சுற்றி வருபவரை தேர்தலில் சுமோ ஜீப்பில் சாமான்களுடன் சுற்றிவரும் அரசியல் வாதியை உங்களுக்கு நினைவூட்டவில்லையா ?
2. பரங்கியர் அமைத்தக் குழுவில் சேர்ந்து குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் திட்டத்தைக் கொண்டு வருபவன் எப்படி புரட்சியாளனாக முடியும் ? அதுவும் 12 மணி நேரம் !
3. மேடையமைத்து ஒரு குறிப்பிட்ட சாதியினரை மற்றொரு சாதியினரை வைத்து செருப்பால் அடிக்க உதவியவன் சமுதாய மாற்றத்திற்காக பாடுபட்டவனா அல்ல கட்ட பஞ்சாயத்து ரவுடியா ?
4. சிவப்புத் தோல் தான் முக்கியம் என்று சிங்களர் முதல் மலையாளிகள் வரை தமிழ்ப் படம் எடுப்பவர்கள் இன்று ‘நாம் தமிழர்’ படை அமைத்ததுப்போல உள்ளது நாயரின் தோல் நிறத் தியரி. ஆரியன் மட்டுமா செகப்பா இருப்பான் , அந்தப் பகுத்தறிவுக்கு ஒரு கருஞ்சல்யூட் !
5. இதெல்லாம் போதாதென்று கைபர் கணவாய் தியரி வேறு…சுத்தம். பிறப்பிலேயே கடவுளை நம்பாதவர்களாம் திராவிடர்கள். ஆரியர்கள் வருவதற்கு முன் கடவுள் என்ற சொல்லைக் கூட அறியாதவர்களாம் திராவிடர்கள். சீக்கிரமா நம்பிடுங்க…ராஜ ராஜ சோழனோ அல்ல நரசிம்மராயனோ அல்ல விஜய நகர அரசர்களோ கோயில்களை பல்லாங்குழி ஆடத்தான் கட்டியிருக்க வேண்டும்…இதெல்லாம் பொருட்படுத்தவில்லையெனினும் தன்னுடைய விளைச்சலுக்கு சூரியன் , நிலம் என இயற்கையைக் கடவுளாக வணங்கிய விவசாயி கூட ஆரியனாகத் தான் இருக்க வேண்டும்.
6. காரல் மார்கஸின் மதம் பற்றி மேற்கோளுக்குக் கைதட்டு வாங்கியிருக்கிறார் மாதவன் நாயர். ஆனால் பாருங்கள் அவர் மருத்துவம் படித்தது பிரட்டனில். அதுவும் காலனியமாக்கமும் தீவிர மதப்பிரச்சாரம் செய்யும் தேசமாக இருந்த நாட்டில். மேற்கோள் காட்டுவது மார்க்ஸ் ஆனால் கல்வி கற்பது…முரண்பாடுதான். இவ்வளவு முரண்பாடுகளைப் பின்னணியில் வைத்திருப்பவர் ‘பிரசவ’ப் பாடம் எடுப்பது நகைப்புக்குறியதே.
7. படிப்பு , சொத்து , சம உரிமை , நில பட்டா இவையெல்லாம் ஆரியக் கடவுளைப் பின் பற்றிய பார்ப்பனர்களால் கடவுள் நம்பிக்கையற்ற திராவிடர்களுக்கு மறுக்கப்பட்ட தாம். குழந்தைகளை வேலைக்கு அனுப்பலாம் என்ற சட்டத்திற்கு சார்பாக இருந்த புரட்சியாளர் இந்தக் கருத்தை முன் வைக்கிறார். ‘டல்லவுசி’ தான் திராவிட நண்பராயிற்றே ? அவர் கொண்டு வந்த மேற்கத்தியப் பாடத்திட்டத்தில் எப்படி நாயரின் திராவிடர்களுக்கு இடமில்லாமல் போனது. ஆச்சரியம் தான்.
குழந்தையை ஒடி விளையாட அழைத்த ஒருவன் இதே காலகட்டத்தில் தான் இருந்தான் ஆம் இதே நாயர் இருந்த காலகட்டத்தில்…ஆமா அது என்ன காலகட்டம் ?