‘நீயா நானா’வில் அவ்வப்போது உடல் ஒட்ட சட்டையுடனும் முருக்கு மீசையுடனுன் பாந்தமாக தமிழ் பேசும் அறிஞர் வருவார். ஒரு நிகழ்ச்சியில் ஏன் சுய முன்னேற்ற நூல்களைப் படிக்கிறீர்கள் ? சமூகத்தைப் படியுங்கள் என்றார். ரமேஷ் பிரபாவையும் சோம.வள்ளியப்பனையும் அந்நிகழ்ச்சியில் நொங்கெடுத்து விட்டார்கள் என சொன்னால் மிகையல்ல [அதற்கு பாராட்டுகள்]. சமூகத்தைப் படிப்பதற்காக பெரியாரையும் அம்பேத்கரையும் பரிந்துரை செய்கிறார். இவர் தி.மு.கழக அதரவாளரான சுப.வீரபாண்டியன்(சுப.வீ).
***
‘திராவிட மாயை’ படித்தீர்களா என்ற வினாவிற்கு நூலெழதியவர் பச்சைப் பார்ப்பனர் ஆர்.எஸ்.எஸ் காரன் என்கிற ஒற்றை வரி மிகாத ‘விமர்சனத்தை’ வைக்கிறார்.
கலைஞர் ஆட்சியைப் பற்றி துக்ளக் கும்பல் பேசினால் சுப.வீயின் ‘தர்க்கம்’ பார்ப்பான் மற்றும் பார்ப்பனக்கூலிகள் என்பன. தி.மு. கழகத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறார் சுப.வீ. ஆனால் சோ ஆதிமுக வை வெளிப்படையாக ஆதரிப்பதற்குக் ‘குடுமி’ தான் காரணம் என்கிறார். தி.மு.கழக ஆதரவு எப்பொழுதிலிருந்து சமூக சேவையானது?
எஸ்.வீ.சேகர் சங்கராசாரிக்கு சாமரம் வீசுபவர் என்று விமர்சிக்கிறார். இதனை சேகர் பெருமையாகத் தானே எடுத்துக் கொள்வார். ஆனால் சுப.வீ.க்கு சாட்சி வேண்டுமென்றால் சங்கராச்சாரி முதல் தி.க தலைவர் வீரமணி வரைக் கூப்பிடுகிறார் – முக்கியமாக இவரது ஈழ நிலைப்பாடுகளை விளக்க இவர்கள் ஊறுகாயைப் போலத் தேவைப்படுகிறார்கள்.
அரசவைக் கவிஞர்கள் மன்னனின் மனம் மகிழ பல பாடல்களைப் பாடி பொற்கிழிகளை பெற்று வந்தனர். அதற்கு ஒப்பாக கலைஞர் ஆட்சியை விமர்சித்தால் இவருக்கு வரும் சினம் அப்பப்பா!? அந்த கவிஞர்களே மேல் போல் உள்ளது – தமிழருவி மணியன் இப்படித்தான் இவரிடம் வசைப்பட்டார்.
இக்கருத்துக்கள் அத்துனையும் இணைய இதழ் வடிவில் அவ்வப்போது கீற்றில் ‘கருஞ்சட்டைத் தமிழர்’ -ஆக வந்து கொண்டுதான் இருக்கிறது. அக்கருத்துப் பெட்டிகளில் சுப.வீ க்கு மக்கள் அவரது இரட்டை நிலையை தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகின்றனர். இவர் அவற்றைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
இது கருஞ்சட்டைத் தமிழரில் நிகழும் ‘தர்க்க’ வாதங்களுக்கு அறிமுகமாக அமையும் என நினைக்கிறேன்.