காட்சிப்பிழையாக இருக்க வேண்டிய லஞ்ச லாவண்யம் இன்று தினசரி உண்மையாகிவிட்டது.
கடைந்தெடுத்த அயோக்கியர்களைக் கொண்டு காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக விளையாட்டுத் துறையில் சம்மதப்படும் அளவுக்கு சுரேஷ் கல்மாடியின் ‘சேவை’ என்ன ?
காமன்வெல்த் கணக்கு வழக்குகள் எகன மொகனையாக இருக்கிறது என்று மத்திய ஊழல் கண்காணிப்புத்துறை 2010 ஜுலையில் அறிவித்தும் சம்மந்தப்பட்ட இரு அதிகாரிகளை மட்டும் இடைநீக்கம் செய்து விட்டு தான் அப்பாவி என்று தொலைக்காட்சிகளுக்கு எந்த கூச்சமும் இல்லாமல் பேட்டிக் கொடுக்கும் தையிரியம் எங்கிருந்து வருகிறது ?
இத்துனை நடந்தும் விளையாட்டுகள் முடிந்த பின் சட்ட நடவடிக்கைகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கும் நாட்டின் தலைமை. கொலை நடக்கப் போகிறது என அரசாங்கத்திடம் தகவல் கொடுத்தால் ‘நடக்கட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்ற பதிலுக்கு ஓப்பாகும். ‘இல்லை இல்லை கொலை நடந்தே விட்டது’ என்று நாம் சொன்னால் ‘கொலை செய்தவன் தடயங்களை அழிக்கட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்கிறது அரசாங்கம்.
வல்லரசு , நாட்டின் கௌரவம் என லாவணி பாடிக்கொண்டு மாநில அரசர்களை விட பண்மடங்கு பகல் கொள்ளையடிக்க காமன்வெல்த் விளையாட்டு சிறந்த வழியாகிவிட்டது. விளையாட்டு என்றாலே ஊழல் என்கிற நிலை இன்று உலகெங்கும் நிலவுகிறது. ஆனால் பிற நாடுகளில் ஊழல் செய்தவர்கள் சில காலமேனும் கம்பி எண்ணித்தான் ஆக வேண்டும்.
இங்கு நாடாளமன்ற எம்.பிகளை வாங்கிய வழக்கிலேயே முன்னாள் பிரதமர் நிரபராதி என தீர்பெழுதும் நீதிமன்றங்கள் உள்ளன. ஊழல் செய்தவருக்கு அமைச்சர் பதவி தரும் அரசியல் கட்சிகள் உள்ளன.
பல நூறுகளில் ஊழல் செய்தால் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இதே ஊழலை பலகோடியில் செய்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. காமன்வெல்த் , சார்க் விளையாட்டுகள் எல்லாம் பண முழுங்களின் விளையாட்டுத்திடலாகி விட்டன. விளையாட்டு வீரர்களின் சாகசமெல்லாம் இங்கு இரண்டாம் நிலைதான்…