புனைவின் தேவை
சூடிய பூ சூடற்க , நாஞ்சில் நாடனின் சமீபதத்திய கதைத் தொகுதி. சாகித்ய அகாதமி விருது வென்ற படைப்பிது. ஒரு குறிப்பிட்ட படைப்புக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கினாலும் ஒரு எழுத்தாளரின் வாழ்நாள் சாதனை விருதாகவே அதனைப் பார்க்கிறேன்.
குடியரசு தினத்தை முன் வைத்துத் தொடங்குகிறது சூடிய பூ சூடற்க! சிறுகதை. குடியரசு தினம் ஏன் எதற்கு யாருக்கு ? யாரைக்கூப்பிட்டு நாம் கொடியேற்றச் சொல்கிறோம். மக்களுக்குகாக அரசா அல்ல அரசுக்காக மக்களா ? குடியரசு விழா என்கிற பெயரில் நடக்கும் மேடை நாடகத்தில் அரசாங்கம் , அரசு ஊழியர்கள் அவர்களது ‘அன்றாட நடவடிக்கைகள்’ , குடியரசு தலைவரின் ரப்பர் ஸ்டாம்ப் தன்மை என பூமிநாதன் வழியாக ‘குடியரசை’ப் பரிகாசித்தப்படியே செல்கிறது கதை.
எழுத்தாளர்கள் தற்கால அரசியல் நிகழ்விலிருந்து ஒளிந்து கொள்ளக் கூடாது. அதனை அனுகி தன்னுடைய எண்ணங்களை பதிவு செய்வதுடன் என்.ஜி.ஆர் போன்றோரின் தியாகங்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப் படுத்த வேண்டும். இவை இன்றைய நம்பிக்கையற்ற சமூகச் சூழலுக்கு மாற்றாக அமையும். நாஞ்சில் நாடன் இதனைச் செவ்வனே செய்கிறார்.