கண்ணாடி கீறல்கள்

கண்ணாடி கீறல்கள்

பக்கத்திலிருக்கும் ஸ்டூலினை எடுத்து மடார் என்று அடித்து தலையைப் பிளந்தாள். ரத்தம் கசிந்த நிலையில் அவசரமின்றி சுயநினைவை இழந்த படியே வலியை அனுபவித்துக் கொண்டிருந்தான் வெங்கட்.

“புரியுதா….” என்றாள் சரளா சற்றே நிதானமாக.

அதிர்ச்சியில் உறைந்து போனான் வெங்கட். நல்ல அடி நடு மண்டையில். ரத்தம் விறு விறுவென மேடையில் கொட்டிய தண்ணீர் போல ஓடிக்கொண்டிருந்தது.

பின் மண்டையை பிடித்த படியே கீழே விழுந்தான் வெங்கட். சோபா கால்கள் வெங்கட்டை நோக்கி சில அடிகள் நகர்ந்து வந்து மறைந்தன.

எந்த குற்ற உணர்வுமின்றி பிரிட்ஜைத் திரிந்து ஐஸ் தண்ணீரை மொடக் மொடக் என குடித்துவிட்டு இடத்தை காலி செய்தாள்.

கீழ் வீட்டு கிழவி யாரோ கருப்பு ஹெல்மெட் போட்டுக் கொண்டு என்பீல்டு பைகில் செல்வதைக் கண்டு , ”வெங்கட் தம்பி யாருப்பா புதுசா…?” என்ற கேட்டுக் கொண்டே வெங்கட் வீட்டிற்குள் நுழைந்தாள்.

அங்கிருந்த கோரக் காட்சியைக் கண்டு “ஐயோ…” என்று அலரினாள். ரத்தத்தைக் கண்டு பாட்டிக்கு உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வெங்கட் அருகே செல்ல முடியாமல் தடுத்தது.

பயத்தில் வெங்கட் வீட்டை விட்டு ஓடி , பிளாக் செக்ரெட்டரி சிங்கத்திடம் செய்தியை சொல்ல விரைந்தாள்.

சரளா திட்டமிட்ட படி திரு.வி.கா பூங்காவிற்கு வண்டியை செலுத்தினாள். ஆக்சிலேட்டர் முழுவீச்சில் அழுத்திக் கொண்டிருந்தாள்.

“இன்னும் நாலு போடு போட்டுருக்கணும் , மானங்கெட்டவன். செத்தாலும் கவலையில்லை.”

என்பீல்டு வண்டி , ஹெல்மட் , பாய் கட் , கருப்பு ஜிப்பா , ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் இன்றைய நாடகம் நிறைவேற அவள் அணிந்திருந்த ஒப்பனைகள்.

பூங்காவில் காத்துக் கொண்டிருந்த பாஸ்கர் சரளா வருவதைப் பார்த்தான். அவனிடம் கற்றுக் கொண்ட தற்காப்பு , ஒப்பனைகள் அவளுக்கு இன்று கைக் கொடுத்திருக்குமா என்று சில நிமிடங்களில் அவனுக்குத் தெரியவரும்.

தாடியை சொறிந்தபடியே சிமிண்டு பெஞ்சு மீது உட்கார்ந்திருந்தான். அவ்விடம் சுற்றி காகித குப்பைகள். சரளா வி்ர்ர் என்று டயர் தேய அவன் முன் வந்து இறங்கினாள்.

”என்ன…? கத முடிஞ்சுதா” என்றான் பாஸ்கர்.

“இல்ல பாஸ்கி ஒரு தட்டுலியே கீழ விழுந்துட்டான். போதுமுனு விட்டுட்டேன்.”

“பச்சாதாபமா ?” என்று பல்லை கடித்துக்கொண்டு கண்கள் விரியக் கேட்டான். இவ்வளவு நேரம் வீரலட்சுமி வேடமணிந்திருந்த சரளாவுக்கு சவுக்கடி விழுந்தார் போல இருந்தது.

”சரி சரி இனி இங்கே இருக்க வேண்டாம்” என்றான் பாஸ்கர்.

”அப்போ எங்க போக…?” வினவினாள் சரளா

”பண்ணுறத ஒழுங்கா பண்ணாம இப்போ கேள்வி கேக்குறீயே…உன்ன என்ன பண்ணலாம் ?” என்று எரிந்து விழுந்தான் பாஸ்கர்.

கோயம்பேடு பஸ் நிறுத்தத்தில் அரசு போக்குவரத்துப் பேருந்து திருப்பூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. பாஸ்கர் அவசரமாக பிஸ்லரி பாட்டிலுடன் இட்லியையும் சேர்த்து வாங்கி வந்தான். சரளா ஜன்னலோரத்தில் துருப்பிடித்த கம்பகளின் வழியே பாஸ்கரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குங்குமப் பொட்டு  புடவை தலையில் பூ என சராசரி பெண்ணாக இருக்க முயற்சித்தாள்.

பேருந்து நிலையத்திற்குப் புறப்படும் முன்

“இருந்தும் பாப் கட்க்கு இந்த ஒப்பனைக்கு சரி வரலை” என்றான் பாஸ்கர்.

“அவசரத்துக்கு இவ்வளவு தான் செய்ய முடியும். வழியில் சௌரி கிடைக்குதா பார்ப்போம்” என்றாள் சரளா.

“அது வரைக்கும் அந்த பூவை வைக்க வேண்டாமே…”

“இல்ல இருக்கட்டும்” என்று அவன் வேண்டுகோளை அசட்டை செய்தாள்.

பாஸ்கர் நடத்துனரிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். வண்டி மெல்ல நிறுத்தத்தை விட்டு நகரத் தொடங்கிவிட்டது. லேசானக் காற்று அவள் புடவைத் தலைப்பை சின்னக் குழந்தையைப் போல் பிடித்து இழுக்கத் தொடங்கியது

ஆனால் அவள் கவனம் ஆடைமீதில்லை…

”என்ன பாஸ்கி ?

”இந்தா இட்லி , இப்போ சாப்பிட்டுக்கோ அடுத்து எப்போ சாப்பிடுவோம் தூங்குவோம்னு தெரியாது…நேரம் நமக்கு சாதகமாக கொஞ்ச நாள் பிடிக்கும்” என்று சலிப்புடன் கூறினான்

“பாஸ்கி உனக்கு இட்லி” என்று கூறிய படியே இரண்டு இட்லியை அவன் கையில் திணித்தாள்.

“ஏன் பாஸ்கர் இப்ப என்ன நடக்கும்…?” வாயில் இட்லியுடன் கேட்டாள்.

“தெரியலை…வெங்கட் மிகவும் மோசமான பேர்வழி. அபின் கஞ்சா பெண்கள் என்று விலைப்போகக் கூடிய அனைத்தையும் கடத்தல் செய்பவன். தனியாளாத்தான் இயங்குவான். ஆனா தன் காரியத்தை முடிக்க அவனுக்கு அரசியல் , காவல் , சட்டம் என்று அதிகாரத்தில் அத்துனை பக்கத்திலும் தொடர்பு உண்டு. தொடர்பு உள்ளவர்களை நல்லாவே கவனிச்சுப்பான்.”

”நம்ம திருமங்கலம் இன்ஸ்பெக்டர் கூட அவன் ஆட்டத்துல சேரனும் துடியா துடிச்சாருனு கேள்விப் பட்டேன். வெங்கட் தனிக்காட்டு ராஜா ஒத்தையா தான் வேட்டையாடுவேன் என்று கறாறாக பேசிட்டான். அந்த இன்ஸ்பெக்டர் சபல சப்ளை இந்த வெங்கட் தான்” என்று வெங்கட் புராணம் பேசிக் கொண்டிருந்தான்.

“சாம்பார் வேணுமா…ஒன்னுமே சாப்பிடலையே…” என்று இடைமறித்தாள்.

இட்லி இரண்டு விள்ளல் உள்ளே தள்ளி விட்டு

“சாம்பார் விடு…” என்றான்.

பின் இருக்கையில் இருப்பவர் பாஸ்கர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். பாஸ்கர் திரும்பி அவரை உற்றுப் பார்த்தான். ஏனோ அவர் வெட்கப்படுவது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

“மிஸ்டர் என்ன வேணும்…?” என்று நாட்டாமை செய்தான்.

“ஒன்னுமில்லையே…” என்று தன் கையிலிருந்த தினசரியால் இருவருக்கிடையே திரைவிரித்தார்.

கைக்கழிவிக் கொண்டே ”எப்படியும் 8 மணி நேரமாகிடும் நல்ல தூக்கம் போட்டுக்கோ” என்றான் பாஸ்கர்.

அடுத்த 5 வினாடியில் பாஸ்கர் களைப்பில் உறங்கிவிட்டான்.

வெங்கட் விவகாரத்தை நினைத்து சரளாவிற்கு தூக்கம் வரவில்லை.

“வேலியில போர ஓணான இப்படி மடியல போட்டுக் கிட்டோமே…” என்று நினைத்துக் கொண்டாள்.

சரளா பாஸ்கரை முதன் முதலாக தன் கல்லூரி நாட்களில் சந்தித்தாள். சரளா சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்ட கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தாள். அப்பா தாத்தா தாத்தாவின் தாத்தா என வக்கீல் குடும்பம். முதலில் ஒரு குடும்ப வழக்கமாகவே அவள் சட்டம் படிக்க முனைந்தாள். நாளடைவில் சமுதாய அளவில் மாற்றங்கள் கொண்டுவர வழிக்கறிஞர் என்ற முகவரி மிக ஏதுவாக இருக்கும் என்பதை உணர்ந்தாள். சட்டப் படிப்பில் மிகுந்த நாட்டம் கொண்டாள்.

தங்கியிருந்த விடுதிக்கு போதிய வசதிகள் வேண்டும் என்று நிர்வாகத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தாள். மாணவரகளிடையே நல்ல ஊக்கம் கிடைத்த்து.

மெல்ல அம்பேத்கர் சே என அவள் தங்கும் விடுதி சுவர்கள் அலங்கரக்கப்பட்டன. இப்படி மெதுவாக அதிகாரத்துக்கு எதிரான அவள் எண்ணங்கள் வளரத் தொடங்கின. சில மாதங்களில் விடுதிப் போராட்டங்கள் வீதிப் போராட்டங்களாக மாறத் தொடங்கி விட்டன.

சரளாவின் நண்பிகள் மிகச் சிலரே சட்ட கல்லூரியில் படித்தனர். அவர்கள் அவளைப் பார்க்கும் போதெல்லாம் “செக்கச் செவேர்னு இருந்தா…ஐயங்கார் பொண்ணு கணக்கா…சென்னை வெயில்ல சுத்தி சுத்தி வதக்கின கத்திரிக்காயா போய்ட்டா…” என்பார்கள்.

அழகாக இருக்க வேண்டும் என்பது எல்லா பெண்களும் விரும்பக்கூடியது தான் ஆனால் சிகப்பாக இருந்தால் தான் அழகென்பதில்லை என்று தான் படித்த ஃப்பெர் அண்டு லௌலி கேஸினை மேற்கோள் காட்டி நண்பிகளின் வாயை அடைப்பாள். இருந்தாலும் தான் கருத்து விட்டேனோ என்று கண்ணாடியை பார்க்க மறுத்தாள்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றுமே சராசரி மக்களுக்கு எதிரானவர்கள் என்று உலக வரலாறுகள் அவளுக்கு எடுத்துக்காட்டின. நிறைய படித்தாள் , தேடித் தேடி போர்களம் கண்டவர்களைப் பற்றி படித்தாள். சில அரசியல் வகுப்புகள் சேரத் தொடங்கினாள். பகத் சிங் தீவிரவாதியல்ல , சே மாபெரும் போராளி , காஸ்ட்ரோ அமெரிக்காவை கட்டைவிரலால் அசைத்தவர் , மாவோவின் கலாச்சாரப் புரட்சி மற்றும் லெனின் செய்த அரசியல் புரட்சி உலகிலேயே மகத்தானது என்று தன் மனத்தில் உள் வாங்கிக் கொண்டாள்.

”நீ என்ன கம்யூனிஸ்ட்டா…” என்று பலர் கிண்டலாகக் கேட்க

”இல்ல ஹியூமனிஸ்ட்…” என்று திரும்ப நக்கலடிப்பாள்.

சராசரி தமிழ்நாட்டுப் பெண்ணாகவே சரளா சட்டக் கல்லூரிக்கு வந்தாள். கடவுள் பக்தி , அதிர்ந்து பேசாதத் தன்மை , மணிரத்தனம் படங்களில் ஆர்வம் , ஏ.ஆர்.ரகுமானின் இசையில் நாட்டம் , மாதவனின் அறிவார்ந்த படத்தேர்வுகள் , வைரமுத்துவின் வரிகள் என்றே தன் வெளி உலகைப் பார்த்தாள். “லிவ் லைப் டு த ஃபுல்லஸ்ட்…” என்பது அவளுக்குப் பிடித்த வாக்கியம்.

ஒரு முறை பாஸ்கர் சட்டக் கல்லூரிக்கு பிரச்சாரம் செய்ய தன் தோழர்களுடன் வந்திருந்தான். திருப்பூரில் நெசவாளரின் மகன். தமிழில் அவனது பேச்சாற்றல் சொல்லி மாளாது. சொல்லவே வேண்டாம் அவன் பேச்சில் மயங்கி நின்றாள் சரளா.

“இன்றும் டீ கோப்பையில் கீறல்கள் கொண்டு மக்களிடையே வேற்றுமை வளர்க்கிறார்கள்.” என்று இரட்டைக் கோப்பை முறைகள் எல்லாம் மலைத் தாண்டிய விஷயம் என்று குரலெழுப்பியவர்களுக்கு ஐயம் கலைந்தான்.

மேலும் சிதம்பரம்த்தில் தலித்து மக்கள் கொலைக்கு எதிராக சட்ட கல்லூரி மாணவர்கள் ஏன் போராட வேண்டும் என்று உணர்த்திக் கொண்டிருந்தான்.

அவனுடன் வந்திருந்த சிலர் கைத்துப்பாக்கியும் வைத்திருந்ததை சரளா தற்செயலாகக் கண்டாள். “எல்லாம் தற்காப்புக்காகத் தான். அதிகாரத்தை எதிர்க்கும் போது சில நேரம் நம்மைக் காக்க ஆயுதம் தேவையா இருக்கு…” என்று சரளாவிடம் சமாதனம் பேசிக்கொண்டிருந்தான்.

அவளுக்கு அகிம்சா வழியில் தான் போராட்டங்கள் நடக்க வேண்டும் என்பதெல்லாமில்லை. மக்களுக்கு அதிகார வர்க்கத்திலிருந்து விடுதலை கிடைக்க போராட தான் தயாராகி விட்டதாக் அன்று பாஸ்கரிடம் சொன்னாள்.

”சமுதாயத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. இவைகளைப் பற்றி சிறப்புப் பட்டறை எங்க ஊரில் நடக்க உள்ளது வந்து பாரேன் தோழி” என்று அழைப்புவிடுத்து சென்றான்.

விலாசம் , நாள் முதலியவற்றை குறித்துக் கொண்டு பட்டறைக்குத் தயாரானாள். தன் வாழ்வில் மிக முக்கியமான ஒரு அடியை எடுத்து வைப்பது போல அவளுக்குப் பட்டது. இதனை அவளுக்குத் தெரிந்தவர்கள் எவரிடம் கூற முடியும் அல்லது விவாதிக்க முடியும் ? எல்லோரும் கேலி கிண்டல் இல்லை அலட்சியப்படுத்தி பேசுவார்கள். எனவே வேண்டாம் என முடிவு செய்திருந்தாள்.

குறித்த நாளில் பாஸ்கரை சந்தித்தாள். நெசவாளர்களின் வாழ்க்கையில் உள்ள மிக முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி அன்று சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. அவை அவளுக்கு போதி மரத்தடியில் உட்கார்ந்திருந்தது போல் தோன்றிற்று. இவ்வளவு ஞானமா தமிழகத்தின் உட்புரத்தில் உள்ள மக்களுக்கு என்று வியந்தாள்.

கந்து வட்டி மீட்டர் வட்டி பற்றி முத்துலிங்கம் என்னும் நெசவாளர் பேச வந்தார். அதில் வெங்கட் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

“சொத்து சொகமுனு இருக்கிறது…தோள்ளத் தொங்கரத் துண்டும்…கொஞ்ச நெஞ்ச மானமும் தான்…பெரிய மவ கல்லாணத்துக்கு வாங்கின கடனுக்கு தெனமும் அந்த நாசமா போறவங்கிட்ட ஏசு வாங்கரேன்…” என்று கண் கலங்கினார்.

கல்யாணத்திற்காக அவர் வாங்கிய கடன் எப்படி குட்டி போட்டு இன்று அவரை கலங்கடித்தது என்று பாஸ்கர் போர்டில் வரைந்து காட்டினான். அந்தக் கணக்கைப் பார்த்து அங்கு வந்திருந்தவர்கள் வாய்பிளந்தார்கள். ரூ. 30000 – ரூ. 300000 ஆன கணக்கு அது.

கூட்டம் முடிந்ததும் பாஸ்கர் சரளாவை நோக்கி வந்தான்.

“பிரயாணமெல்லாம் வசதி பட்டதா…? எங்க தங்கியிருக்க…?” என்றான்.

“பஸ் விட்டு நேரே இங்க தான் வர்றேன்…, இன்னும் பல் கூட தேக்கல…” என்றாள்.

”சரி வா மன்ற அலுவலகத்துக்குப் போவோம் அங்க எல்லா செய்துக்கலாம்…” என்றான்.

துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அலுவலகத்திலிருந்த விருந்தினர் அறைக்குள் நுழைந்தாள். பல நாட்கள் பூட்டிக் கிடந்த வாசனை அறையைப் பிய்த்துக் கொண்டு வந்தது. தண்ணீர் பாக்கெட் உறைகள் , காகிதக் குப்பைகள் சேர்ந்திருந்தன. அறையிலிருந்த துடப்பத்தால் அவற்றை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

பாஸ்கர் “டீ…” என்று உள்ளே நுழைந்தான். “நீ ஏன் சரளா இதெல்லாம்…” “சரி வேண்டாம் நான் எதுவும் சொல்லப் போக அப்புறம் அது பெண்ணுரிமை பிரச்சனையாகிடப்போகுது…” என்று சிரித்துக் கொண்டு தேநீரை மேசை மீது வைத்தான்.

“டீ…குடி கொஞ்ச நேரம் பேசுவோம் அப்புறம் மதியம் சாப்பிடப் போகலாம்…” என்றான்.

“கந்து வட்டிக்காரங்க பிரச்சனை பெரிய பிரச்சனையா இருக்கும் போல இருக்கே இந்த இடத்துல…” என்றாள்

“ஆமா எல்லாரும் பொழைக்க விவசாயத்த விட்டு இங்க வராங்க…வர இடத்துல தினக்கூலி வேல தான் கிடைக்குது…ஆத்ர அவசரத்துக்கு நெஞ்சு வலி வந்தா கூட மீட்டர் வட்டி வாங்கி தான் ஆஸ்பத்திரிக்குப் போகணும்…” என்று அலுத்துக் கொண்டான் பாஸ்கர்.

”இந்த வெங்கட பெரியாளோ…?” என்று விசாதரித்தாள்

“…ம்ம்ம்” என்று சொல்லி தொடந்து பேசாமலிருந்தான்.

“நம்ம மன்றத்துல இவனுகள மாதிரி ஆட்கள தனி விதமா கவனிப்போம்…” என்றான் தயங்கிய குரலில்.

“எங்கையாவது தனியா மாட்டினா நொங்கெடுத்து ஊர விட்டு ஓட வைப்போம்…

ஒரு விதமான இன்ஸ்டண்ட் ஜஸ்டிஸ்…

அது தேவையா இருக்கு…

கொள்கை ரீதியா எல்லாம் இவங்களொட மோத முடியல…போலிஸ் சட்டம் எல்லாம் அவங்க பக்கம்…

நேத்திக்குதான் கேள்வி பட்டேன் வெங்கட் மெட்ராஸ் போறானாம்….” என்று அடுக்கிக் கொண்டே போனான்.

”அவன நொங்கனும்…” என்றான்.

போராட்டத்தில் நேர்மை நெறி இவைகள் பற்றி அன்று இரவு வரை சரளாவுடன் விவாதம் நடந்தது. “அடிக்கிறவன் அடிச்சிக்கிட்டே இருப்பான் நாம எல்லாத்தையும் பொத்திக்கிட்டு உட்காரனுமா என்ன…? நொக்கெடுக்கிறதத் தவர வழியில்ல” என்றான்.

”சங்கர் படம் மாதிரி இருக்கு நீங்க பண்ணறது…” பாஸ்கி “இதெல்லாம் நிஜ வாழ்க்கையில ஒத்து வராது…” என்றாள்.

பின்பு முத்துலிங்கத்தை வெங்கட் எப்படியெல்லாம் அவமானப்படுத்தினான் என்று விவரிக்கத் தொடங்கினான்…ஒரு நாள் நடுத்தெருவில் வெங்கட் முத்துலிங்கத்தின் வேட்டியை கழட்டிவிட்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளதை விவரிக்கும் போது அவன் குரல் தழ தழத்தது…

அந்த உணர்ச்சிப் பெருக்கில் சரளாவும் சங்கமமானாள்.

பின்பு நடந்தேறிய நாடகம் தான் இன்று மீண்டும் அவளைத் திருப்பூருக்கு அழைத்து செல்கிறது.

அவள் மனத்தில் பலக் குழப்பங்கள் இருந்தன , தூக்கம் தொலைவிலிருந்தது.

ஏன் இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக அனுகியிருக்கக் கூடாது? ஆறேழு வருடமானால் என்ன நியாயம் கிடைக்கும் போது அத்துனை காயத்திற்கும் மருந்து போட்டது போல் இருந்திருக்குமே? ”எவனுக்கு வேணும் அப்படிப்பட்ட நியாயம்” என்ற பாஸ்கரின் குரல் கூடவே ஒலித்துக்கொண்டிருந்தது.

காலையில் திருப்பூர் வந்ததும் டீக்கடையில் தினத்தந்தியை வாங்கிக் கொண்டு வந்தான் பாஸ்கி. மூன்றாம் பக்க பெட்டிச் செய்தியில் “கள்ளக் கடத்தல் நாயகன் – நாக் அவுட்” என்பதைக் காட்டி புன்னகைத்தான். அதில் ”கை ரேகைகள் சிக்கின…கீழ்வீட்டு கிழவி வாக்குமூலம்“ என்ற வரியைக் கண்டாள் சரளா. சற்றே அச்சத்துடன் தன் கையிலிருந்த கீறல் விழுந்த கண்ணாடியில் தன் ஒப்பனையை சரி பார்த்துக் கொண்டாள்.


இது ’உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன