நிலைமாற்றம்

6 10 2009

மொழி சீரான ஓட்டத்திற்காக , கிரந்தம் கலந்தும் எழுதலாம் என்பதே எனது நிலை. ஆனால் அது எந்த அளவுக்கு விபரீதத்தில் மொழியைக் கொண்டு செல்கிறது என்பதைக் காணவே இப்பதிவு. மேலும் தமிழ் விக்கியின் சில நிர்வாகிகள் குறித்து சில எண்ணங்கள்.

திராவிட மொழி அரசியலின்றி , சமஸ்கிரத காழ்ப்பின்றி மொழியின் அழகியலை அனுபவிக்கவும் , பரப்பவும் நம் தமிழ் மொழிக்காக இணையத்தில் சிலர் உள்ளனர். இவர்களில் சிலர் கிரந்தம் தனக்குத் தேவையில்லை என்ற நிலையை எடுத்துள்ளனர்.  கிரந்தம் தேவையென பல்லவர்கள் பிரபலப் படுத்தினாலும் அதன் தேவையின்றி பல ஆக்கங்கள் அக்காலம் முதற் கொண்டே வெளிவந்துள்ளன.

இவர்களை மொழித் தாலிபான்கள் எனத் தரக்குறைவாக பட்டம் கட்ட நினைப்பவர்கள் தான் உண்மையில் தங்களைத் தானே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

மொழி ஆர்வலர்களின் பங்களிப்பு தமிழ் கணிமை முதல் , இணையத்தில் கட்டற்ற களஞ்சியத்தை நிர்வகித்தல் , உலவியில் தமிழின் முதல் அகராதி தயாரிக்கும் முயற்சி வரை அவர்களின் வாழ் நாளில் கணிசமான நேரத்தை செலவழித்து வருகின்றனர். நவயுகத்தில் கணினி மயமாக்கம் எங்கும் பரவிக்கிடக்கும் இன்றைய நிலையில் இவர்களின் பணிப் போற்றத் தக்கதே.

சிக்கல்

அச்சூடகத்தில் – தமிழ் சிற்றிதழ்களில் தான் தமிழ் மொழிக்கான அடையாளம் இன்றும் இருக்கிறது.

வரும் 10 ஆண்டுகளில் , இன்று பரவலாகப் படிக்கப் படும் தமிழ் இதழ்களால் , இன்று நாம் காணும் தமிழ் மலினமாகி விடும் என்பதே நிதர்சணம். தமிழ் மொழியைப் பற்றி விவாதம் நடத்தும் பொழுதே (விஜய் தொலைக்காட்சியில்) தமிழில் மட்டும் பேச முடியாமல் திணறும் சமுதாயம் இன்று சென்னையில் உள்ளது ! இதனை விட மொழிக்கு என்ன கேவலம் இருக்க முடியும்.(இதே நிலை தெலுங்கிற்கு ஐதிராபாத்திலும் இருப்பதாக என் நண்பர் வருத்தப் பட்டார். )

ஒரு பத்தி தமிழில் படிக்க ‘கடுமையாக’ இருந்தால் ‘தனித்தமிழ்’ இயக்க வாதிகள் மொழியைக் கொல்கிறார்கள் என பதரும் மொழிக் காப்பாளர்கள், அவ்வாக்கியத்தை எப்படி எளிமையாகவும் மென்மையாகவும் மாற்ற முடியும் என்பதை ஏன் சொல்ல முன் வருவதில்லை ? மட்டம் தட்ட மட்டும் முதலில் நிற்பவர்களுக்கு எளிமை படுத்துவதென்றால் ஆங்கிலமாக்குவதா ?

கிரந்தம் தவிர்த்து எழுதுபவர்கள் தாலிபான்கள் எனில் கிரந்தம் கலந்து தான் எழுதுவேன் என்பவர்கள் கற்கால மனிதர்களா ?

கிரந்தமில்லாமல் எழுதலாம் என்கிற இயக்கம் எந்த அரசியல் அடிப்படையிலும் இன்று இணையத்தில் செயலாற்றவில்லை என்பதை என் ஒரு வருட இணைய இயக்கத்தில் காண்கிறேன்.

மொழியில் சீர்நிலையில்லாதது இன்றைய கணினி யுகத்தில் பெரும் சிக்கல்.

பிரச்சனை – பிரச்னை – பிரச்சினை என ஆளாளுக்கு ஒரு சொல்லைத் திரித்தால் எப்படி ஒரு மென்பொருள் சொல் திருத்தியயை உருவாக்க இயலும் ? சிக்கல் என்ற சொல்லினை பயன்படுத்தினால் சாலச் சிறப்புயென்றாலும் அதனை ஒரு அறிவுறுத்தாலாகவே முன் வைக்க விரும்புகிறேன்.  திட்டப்படுத்த முயலவில்லை.

விக்கியின் சில நிர்வாகிகள் குறித்து சில எண்ணங்கள்

கிரந்தமில்லாமல் எழுதுபவர்கள் செய்த ‘தவறு’ ஒன்றே என நினைக்கிறேன். ஒரு பொது தளத்தின் நிர்வாகியாக இருந்து கொண்டு கிரந்தத்தைப் பற்றி பொத்தாம் பொதுவாக பதிவுகள் எழுதியது பலரது மனத்திலும் ஐயத்தை எழுப்பியிருக்கிறது. இதனைக் களையவே இப்பொழுது பல மணித்துளிகள் செலவு செய்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மேலும் அவர்கள் ‘தா’ பற்றி யாராவது ஒரு சொல் உதிர்த்தால் அதற்கு விளக்கம் கொடுக்கத் தொடங்கி அதுவே வாய்க்கா வரப்பு விவாதமாகி விடுகிறது. அவதூறுகள் எனத் தெரிந்தால் அதனை புறம் தள்ளுவதே நன்று.

பொது வெளியில் , மேலும் அவதூறுகள் ஏற்படாமல் விக்கியைப் பாதுகாக்க வேண்டியது இவர்களின் தார்மீகப் பொருப்பு என கருதுகிறேன்.

***

குறிப்பு – நான் கிரந்தம் பற்றி முதிர்ச்சியின்றி ஏதாவது முன்னர் சொன்னதை இங்கே கொண்டு வந்து காட்ட வேண்டாம்.





தமிழில் முதல் மின்னஞ்சல்

9 10 2008

கணினி இயக்கக் கற்றுக் கொண்டு பத்து வருடங்கள் பின்னர் முதல் முறையாக நான் இந்த வருடம் தமிழில் மின்னஞல் செய்தேன். தமிழில் மின்னஞசல் அனுப்புவதே பெரிய செய்தியா என்றால், ஆம் என்றே சொல்லுவேன். ஆங்கில விசைப்பலகையில் டிரான்ஸ்லிட்ரேட் முறையில் தான் என்னால் தமிழில் தட்டச்சு செய்ய முடியும் தமிழ்99 கற்றுக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.

முதலில் தமிழில் மின்னஞ்சல் செய்தது என் தாத்தாவிற்கு கனாகாபிஷேகம், அனைவரும் வாருங்கள், என்று என் உறவினர்களுக்கு அனுப்பினேன். ஒருவரும் ”பலே” என்று சொல்லவில்லை. இதில் சின்ன மகிழ்ச்சி. எப்படி ?

சமீபத்தில் வாரணம் ஆயிரம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பலரும் படத்தின் பெயர் அற்புதம். வாரணம் என்பது இன்றையத் தமிழர்களுக்குப் புதிய சொல் என்று கேவலப்படுத்தினர். அதே இசை வெளியீடு மேடையில் கௌதம் மேனன் ஆங்கிலத்துக்கு இடையே தமிழை சேர்த்துக் கொண்டிருந்தார் என்பது வேறு விஷயம்.

தமிழகப் பள்ளியில் தமிழைப் பாடமாகக் கொண்ட எவரும் கலிங்கத்து பரணி படிக்காமல் இருந்திருக்க முடியாது. கலிங்கத்து பரணியில் வரும் “வாரணம் ஆயிரம்” பாடலைப் போற்றாதத் தமிழாசிரியர்களே இருக்க முடியாது என்று நினைக்கிறேன். அப்படி இருக்க கௌதம் மேனனன் தமிழர்களை அகராதி தேட வைத்துவிட்டார் என்று “பலே” பாராட்டினார்கள்.

அது போல் என் உறவினர் யாரும் ”பலே நீ தமிழில் மின்னஞ்சல் செய்தாய்” என்று சொல்லாதது எனக்கு ஒரு அற்ப சந்தோசம். பின்பு சில நாட்களில் அரட்டை அரங்குகளில் (இணையத்தில்) தமிழில் தட்டச்சு செய்ய விழைந்தேன். அப்போழுது என் தங்கை எப்படி தமிழில் தட்டச்சு செய்கிறாய் என்றாள். NHM Writer என்ற மென்பொருளை அவளுக்கு அறிமுகப் படுத்தினேன். இருப்பினும் இன்றும் ஆங்கில சொற்கள் கொண்டே தமிழில் என்னுடன் அரட்டை அடிக்கிறாள். சில நேரங்களில் நானும் இவ்வாறு செய்வது உண்டு. NHM Writer உதவியுடன் பத்து இந்திய மொழிகளில் தட்டச்சு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

***

நான் நெய்தல் நிலமென்றால் என்னவென்றுத் தெரிந்துக் கொள்ள இணையத்தை சுற்றி வந்தேன். சங்கத்தமிழ் விளக்கம் ஒன்றை பி.கே. சிவகுமாரின் வலைப் பதிப்பில் கண்டேன்(வருடம் 2006). விளக்கம் நன்றாகவே இருந்தது. இருப்பினும் கருத்துப் பெட்டியில் இருந்த ஒரு கருத்து என் தலையை சுற்றியது:

http://blog.360.yahoo.com/blog-PXV91X0hcLXIfIjWgURCDm17.Q–?cq=1&p=46#comments

Pari, thanks. You could be very well correct. I could figure out the meaning of Manimidam Pavalam and Nithila Kovai. When I did figure out, I thought the names were given based on grammer or how the paadalkal were constructed. Ainthu Thinaikal, agathinaikalai solkireerkal enru ninaikirean. Paalai enru oru nilam illai. Mullaiyum kurinjiyum muraimai itru thirinthu paalai enbathor paruvam kollum enru patithathu ninaivu varukirathu. Aka naanoril ennukum thinaikum enna vuravu enru enakum theriya villai. aanaal partheerkalaa, paalai thinaiyil thaan athikam paadalkal. Pirithalum pirithal nimithamum tharukira sokam. Sweeteest songs are those which talks of saddest things enru shelly sonnathu ninaivuku varukirathu.

bear with my thanglish. just came to work. could not control my urge to reply after seeing ur comment.

thanks and regards.

தமிழில் ஒரு மென்பொருள் தட்டச்சு செய்ய அலுவகங்களில் ஏன் முடிவதில்லை. தறவிறக்கம் செய்த மென்பொருள் கொண்டே தமிழை கணினியில் உபயோகிக்க வேண்டியுள்ளது. நாம் தமிழ் தெரிந்தவர்களுடன் பெரும்பான்மையான நேரங்களில் கணினியில் தமிழில் உரையாடாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனால் ஆங்கிலச் சொற்கள் கொண்டாவது தமிழில் ’பேசிவிட’ வேண்டும் என்பது அனைவரின் ஆர்குட் ஸ்கிராப் பெட்டிகளைக் கண்டால் தெரிகிறது.

“yei eppidi di irukke”
“nalla irukken”

என்று நாம் பார்க்கத்தான் செய்கிறோம். இவர்களை மெல்ல மெல்ல தமிழில் பிழை செய்தாலும் பராவாயில்லை தமிழில் தட்டச்சு செய்ய ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம் அன்றாட கணினி உபயோகத்தில் நம்மால் முடிந்த தமிழை உபயோகிக்கலாம் என்பது என் தாழ்மையானக் கருத்து. இந்த அளவிற்கு நாம் ’சீர்திருத்தம்’ முதலில் கொண்டுவர முயல்வோம். இது ஒரு எட்டக் கூடிய இலக்கு என்று நினைக்கிறேன். பின்னர் தமிழ் படைப்புகளையும் அறிமுகம் செய்வோமே என்றால் தமிழ் இன்றைய தலைமுறையினரிடையே தழைப்பதில் ஐயமில்லை.





வெட்டி ஞாயம்

1 08 2008

இந்த வாரம் சில ”தமிழைக் காபாத்துங்க” பதிவுகளைக் கண்டேன்.

ஆங்கிலக் கல்வி கற்பித்து ‘சமச்சீர் கல்வியை’ பரப்ப விரும்பும் விஜயகாந்த் கண்டிப்பு

ஹிண்டுவில் வெளிவந்த தமிழ் கல்விக்கு ‘எதிரான’ கட்டுரைக்கு கண்டணம்

கிரந்த எழுத்துக்கள் தேவையா

இந்த பதிவுகளில் என்னுடைய மறுமொழிகளையும் விட்டுள்ளேன். ஆனால் எனக்கு வர வர வாக்குவாதம் பண்ண நேரமில்லை அது மட்டுமல்ல படித்தவர்கள், ‘பகுத்தறிவாதிகள்’ இவர்களின் எண்ணங்கள் எப்பொழுதுமே நாணயத்தின் மறுபக்கத்திற்கு ஆதரவு தானாகவே செல்கிறது. இதுவும் ஒரு முக்கிய காரணம் நான் வாக்கு வாதத்திலிரங்காமலிருப்பதற்கு.

முதலில் ‘சமச்சீர் கல்வியை’ பற்றி பார்ப்போம். கண்டிப்பாக ஆங்கிலத்தால் தான் சமச்சீர் கல்வி தர முடியும் என்பது எதிர்க்க வேண்டிய எண்ணம் தான். இதற்கு தீர்வென்ன? விஜயகாந்தை வாரினால் போதுமா? உலக தமிழ்ர்கள் மக்கள் தொகையே 10 கோடியைத் தாண்டாத பொழுது இவர்கள் எப்படி தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவார்கள்? நடைமுறைக்கு ஒவ்வாத உவமைகள். ஐடியலிஸ்ட்டிக் எண்ணங்கள் எல்லாம் போற்றத்தக்கது தான் ஆனால் எப்படி செயல் படுத்துவீர்கள் என்று கேட்டால் , அது அரசாங்கம் தான் எதாவது செய்யனும் என்று நழுவ வேண்டியது. உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் முறையில் மட்டும் கல்வி புகட்ட எண்ணுவீர்களா என்றால் அதற்கு பதில் குழந்தை பிறந்தவுடன் பார்க்கலாம் என்கிறார்!

இரண்டாவதாக பத்ரியின் தமிழ் வழியில் கற்பது கடினமா என்ற பதிவிவைக் காண்போம். கட்டுரைத் தொடக்கத்தில் ஆசிரியர் இருவர் தமிழ் வழிக் கல்வியில் அறிவியல் மற்றும் கணித பாடங்கள் அல்லது சூத்திரங்களை மொழி பெயர்க்கும் பொழுது அதனை புரிந்துக் கொள்வது கடினம் என்கின்றனர். எடுத்துக்காட்டாக கிராவிட்டி என்ற சொல்லை ஒரு ஆசிரியர் சொல்கிறார். வெகுஜன ஊடகங்களில் புவி ஈர்ப்பு சக்தி என்று எழுதி கேட்டு படித்திருப்பதால் எனக்கும் உங்களுக்கும் இது தவரான எடுத்துக்காட்டு என்று உடனே தென்படும். ஆனால் இதுவே மொட்டர் பைக் என்ற சொல்லை எடுத்துக்காட்டாக காட்டியிருந்தால் என்ன செய்வார்கள். உடனே அதற்குத்தான் துள்ளுந்து இருக்கிறதே என்பீர்கள். துள்ளுந்து அங்காடியில் சென்று ”ஐயா , இந்த துள்ளுந்தின் விலை என்ன” என்று கேட்க இவர்கள் தயாரா? இதே நடைமுறை சிக்கலைத் தான் ஹிண்டுவில் அந்த ஆசிரியர் எடுத்துகாட்ட முயல்கிறார். தமிழை தமிழில் கற்பதே கடினம் என்று சொல்லுகின்றார் ஒரு ஆசிரியர். இதில் எனக்கும் உடன்பாடில்லை. அதனால் பத்ரி சொல்லுவது போல் காலத்திற்கு ஏற்றார் போல் பாட புத்ததங்களும் மாறவேண்டும்.

மூன்றாவதாக ‘இரவி’ எழுதியா கிரந்தம் என்ற பதிவினைக் காண்போம். மொழி எழுத்துக்கள் மாறுவது அழகு என்று ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ‘புது’(?!) எழுத்துக்கள் (ஷ், ஸ், ஸ்ரீ…) ஒரு மொழியில் வருவது இயல்பன்று என்று வாதிடுகிறார். ஞாயமே , ஆனால் தமிழின் தொண்மை , இயல்புகளை மீறியதால் தான் இவ்வளவு நூற்றாண்டுகள் கடந்து வந்துள்ளது. பெயர்ச் சொல்லிற்கு தமிழக அரசே அட்ச்சதைப்போட்டு வரிவிலக்குக் கொடுத்தப் படம் ‘சிவாஜி’. அப்படியிருக்க கணித மேதையின் பெயரை இராமானுசன் என்றுதான் விக்கிப்பீடியாவில் பதிவேன் ஏனேன்றால் இது தமிழர் மரபு என்பதும் பல்லாயிரக்கணக்கிலுள்ள மற்ற கிரந்த எழுத்தகளடங்கி விக்கிப்பதிவுகள் (எம்.ஜி.ஆர், ஜே. ஜெயலலிதா) இருக்க ஏன் ராமானுஜன் மட்டும் இராமானுசன் ஆக வேண்டும் என்ற வாதமும் எழுகிறது. கிரந்த எழுத்துக்களுக்கு எழுத்து வடிவமுண்டு , வெகுஜன ஊடங்கள் பரவலாகப் பயன்படுத்துகின்றனர் என்ற இரு பலத்த நடைமுறை ஆதாரங்கள் இருந்தாலும் இது ஆராயாமல் எடுத்த முடிவு என்று கூறுவது தமிழ் என்ற மொழியை எந்த வல்லுநரிடம் கேட்டு படைத்தனர் என்ற் கேள்விக்கு சமம்.

தமிழ் “பற்று” என்ற ஒலிப்பதிவை நான் இரு வாரங்கள் முன் செய்துள்ளேன். கேட்க விரும்புவர்களுக்கான சுட்டியிங்கே.

நடைமுறைக்கு சாத்தியமற்ற விவாதங்கள் , முடிவுகள் என்று தான் செல்கிறது இந்த மூன்று பதிவுகளும். நீங்கள் பேசும் அனைத்தும் அறைத்த மாவு. ஆகவே செயலில் காட்ட விரும்பாதவோர் இதனைப் பற்றி பேசினால் இதனை ஏற்க நான் மட்டுமல்ல நிதற்சன வாழ்கையின் தினசரி தடங்கல்களைத் தாண்டி தன் குடும்பத்தை முன்னேற்ற பாடுபடும் எந்த தமிழரும் ஒத்துக்கொள்ள மாட்டார்! சோத்துக்கு பின் தான் கொள்கை மண்ணாங்கட்டி எல்லாம்!





அக்கம் பக்கம்: ஒலிப்பதிவு தொடக்கம்

20 07 2008

அக்கம் பக்கம் என்ற ஒலிப்பதிவினை பாட்பஸாரில் தொடங்கியுள்ளேன். எனது இரண்டாவது ஒலிப்பதிவில் தமிழ் பற்று என்ற தலைப்பில் பேசியுள்ளேன்.

 

ஒலிப்பதிவின் சாராம்சம்:

  • இன்று தமிழ் மொழியின் வளர்ச்சி எப்படி பார்க்கப்படுகிறது.
  • கொள்கைகளை சுமக்கும் மனிதர்களின் கூடாரமாக தமிழ் மாறிவிட்டதா?
  • வேற்று மொழிச் சொற்களை ஏன் அறவணைக்க வேண்டும்.
  • தமிழ் மொழியிக்கு விஞ்ஞானத் தாக்கம் அதிகம் தேவைப்படுகிறது.

கேட்டுவிட்டு உங்கள் கருத்தகளைச் சொல்லலாம்.